Thursday 3 September 2009

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


ரமலானின் சிறப்புகள்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதைச் செவியேற்றதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரமலான் மாதத்தின் வருகைக்காகச் சொர்க்கம் வாசனைப் புகை காட்டப்பட்டு ஆண்டின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அது அலங்காரம் செய்யப்படுகிறது. ரமலான் மாதத்தின் முதலிரவு வந்து விட்டால் அர்ஷின் கீழிலிருந்து ஒரு காற்று வீசுகிறது. அதற்கு மஸீரா என்று பெயர். (அக்காற்று வீசியவுடன்) சொர்க்கத்துடைய மரங்களின் இலைகளும், சொர்க்கத்துக் கதவுகளிலுள்ள சங்கிளி வலையங்களும் (ஆடி அசைந்து) ஒரு வித இன்னிசையை எழுப்புகின்றன. கேட்பவர்கள் அதைவிட இனிமையான இசையை என்றுமே கேட்டிருக்க முடியாத மனோ ரம்மியமான இசையை அவை எழுப்புகின்றன.

அப்பொழுது ஹூருல் ஈன் என்னும் சொர்க்கக் கன்னியர் தம் இடங்களை விட்டு வெளியாகிச் சொர்க்கத்து (மாளிகைகளின்) முகப்புகளில் வந்து நின்று கொண்டு எங்களுக்காக அல்லாஹ்விடம் பெண் பேசி திருமணம் செய்து கொள்பவர் எவரேனும் இருக்கின்றனரா ? என்று அழைக்கின்றனர். பிறகு, ‘சொர்க்கத்தின் காவலர் ரிள்வான் அவர்களே ! இது என்ன இரவு ?’ என்று கேட்கின்றனர். அதற்கு ரிள்வான் அவர்கள் லப்பைக் என்பதாகக் கூறி, ‘இது ரமலான் மாதத்தின் முதலிரவு. இன்று முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத்தினரில் நோன்பு நோற்பவர்களுக்காகச் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன’ என்று பதிலளிப்பார்.

மேலும், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாவது : பிறகு, அல்லாஹூதஆலா (சொர்க்கத்தின் காவலரிடம்) ‘ரிள்வானே ! சொர்க்கத்தின் வாசல்களை நீர் திறந்து வைப்பீராக ! (நரகத்தின் காவலரிடம்) மாலிக்கே ! அஹ்மது ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடைய உம்மத்தினரில் நோன்பு வைத்தவர்களுக்காக நரகத்தின் வாசல்களை அடைத்து விடுவீராக ! ஜிப்ரீலே ! என் ஹபீபாகிய முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடைய உம்மத்தினரின் நோன்பில் குழப்பத்தை உண்டாக்காமல் இருப்பதற்காக பூமிக்குச் சென்று அட்டூழியம் புரியும் ஷைத்தான்களை நீர் கைது செய்து கழுத்தில் விலங்கிட்டு, பிறகு அவற்றை கடலில் தூக்கி எறிவீராக !’ என்று கூறுகிறான்.

மேலும், அல்லாஹூ தஆலா, ரமலான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் மூன்று தடவை பின்வரும் வாசகங்களைச் சப்தமிட்டுக் கூறும்படி ஓர் அறிவிப்பாளருக்குக் கட்டளையிடுகிறான். “கேட்பவர் எவரேனும் இருக்கின்றனரா ? அவர் கேட்பதை நான் கொடுக்கிறேன். தவ்பாச் செய்பவர் எவரேனும் இருக்கின்றனரா ? அவருடைய தவ்பாவை நான் ஏற்றுக் கொள்கிறேன். பாவ மன்னிப்புத் தேடுபவர் எவரேனும் இருக்கின்றனரா ? அவருக்கு நான் பாவ மன்னிப்பளிக்கிறேன். ஒரு சீமானுக்குக் கடன் கொடுப்போர் யாருமுண்டா ? அவன் ஒன்றும் இல்லாதவனல்ல, மேலும் சிறிதும் குறைக்காமல் சம்பூர்ணமாக (முழுமையாக) நிறைவேற்றுபவன்” என்று அவர் சப்தமிடுகிறார்.

மீண்டும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாவது : அல்லாஹூ தஆலா ரமலான் மாதத்தில் ஒவ்வொரு நாளும் நோன்பு திறக்கும் நேரத்தில் நரகத்திற்குரியவர்களான பத்து இலட்சம் நபர்களுக்கு நரகிலிருந்து விடுதலை அளிக்கிறான். ரமலான் மாத்தின் கடைசி நாளில் அம்மாதத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை விடுதலை அளித்த அளவுக்கு ஒரே நாளில் விடுதலை செய்கிறான். லைலத்துல் கத்ரு இரவு வந்துவிட்டால் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹூ தஆலா கட்டளையிடுகிறான். அவர்கள் மலக்குகளுடைய ஒரு பெருங் கூட்டத்துடன் பூமிக்கு வருகை தருகிறார்கள். அவர்களிடம் ஒரு பச்சைக் கொடியும் இருக்கும். அக்கொடி கபாவின் மீது நட்டு வைக்கப்படும். அப்பொழுது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நூறு இறக்கைகள் இருக்கும். அவற்றில் இரண்டு இறக்கைகளை அந்த இரவில் மட்டும்தான் விரிக்கிறார்கள். அவ்விரண்டையும் கிழக்கிலிருந்து மேற்கு வரை விரித்து வைத்திருப்பார்கள்.

பிறகு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மலக்குகளை நோக்கிப் பிரிந்து செல்லுமாறு கூறுகிறார்கள். அவர்கள் சென்று (உலகெங்கிலும்) நின்றவராக, உட்கார்ந்தவராக, தொழுபவராக, திக்ரு செய்பவராக இருக்கின்ற அனைவருக்கும் ஸலாம் கூறி அவர்களிடம் முஸாஃபஹாச் செய்கின்றனர். அவர்களுடைய துஆக்களுக்கு ஆமீன் கூறுகின்றனர். இது ஃபஜ்ரு உதயமாகும் வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பஜ்ரு உதயமானவுடன், ‘மலக்குகளே ! புறப்படுங்கள் !’ என்று ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறுகிறார்கள். அப்பொழுது அந்த மலக்குகள், ‘ஜப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களே ! அல்லாஹூ தஆலா அஹ்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத்திலுள்ள முஃமின்களின் தேவைகள் விஷயத்தில் என்ன முடிவு செய்துள்ளான் ?’ என்று கேட்பார்கள். அதற்கு ஜப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “அல்லாஹூ தஆலா அவர்களின் பக்கம் கவனம் செலுத்தி நான்கு நபர்களைத் தவிர மற்றவர் அனைவருக்கும் மன்னிப்பளித்து விட்டான்” என்று கூறுவார்கள்.

இதனைக் கேட்ட ஸஹாபாக்கள், ‘யாரஸூலல்லாஹ் ! அந்த நான்கு நபர்கள் யார் ?!’ என்று கைட்டனர். (1) மது அருந்தும் பழக்கமுடையவன். (2) தன் பெற்றோருக்குப் பணிவிடை செய்யாமல், அவர்களை ஒதுக்குபவன். (3) உறவு முறையைத் துண்டித்து வாழ்பவன். (4) பொறாமை கொள்கிறவன், அதாவது மனிதர்களிடம் தொடர்பைத் துண்டித்து வாழ்பவன்” என பதில் அளித்தார்கள்.

பிறகு ஈதுல் ஃபித்ருடைய இரவு வந்ததும் (வானுலகில்) அதற்குப் “பரிசு வழங்கும் இரவு” என்பதாகப் பெயரிடப்படுகிறது. ஈதுப் பெருநாள் சுப்ஹூ நேரத்தில் அல்லாஹூ தஆலா மலக்குகளை உலகிலுள்ள ஊர்கள் அனைத்திற்கும் அனுப்புகிறான். அவர்கள் பூமிக்கு வந்து தெருக்கள், பாதைகள் ஆகியவற்றின் முகப்புகளில் நின்றுகொண்டு, ‘முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் உம்மத்தினர்களே ! தயாளம் மிக்க இரட்சகனின் சந்நிதானத்திற்குச் செல்வீர்களாக ! அவன் பெருங் கொடையளிப்பவன் ; மகத்தான குற்றங்களையும் மன்னிக்கிறவன்’ என்று சப்தமிடுகின்றனர். அந்தச் சப்தத்தை மனிதர்கள், ஜின்கள் இருசாராரைத் தவிர மற்றுமுள்ள அல்லாஹ்வின் படைப்பினங்கள் அனைத்தும் கேட்கின்றன.

பின்னர் மனிதர்கள் ஈதுகாவிற்குச் செல்லும் பொழுது அல்லாஹூ தஆலா மலக்குகளை நோக்கி, ‘ஒரு கூலிக்காரருக்கு, வேலையை முடித்தபின் என்ன பிரதிபலன் கொடுப்பது ?’ என்று கேட்கிறான். அதற்கு மலக்குகள்,’எங்கள் இரட்சகனே ! எங்கள் எஜமானனே ! அவருக்குரிய பிரதிபலன், அவருடைய கூலியைப் பரிபூரணமாகக் கொடுப்பதாகும்’ என்று கூறுகின்றனர்.

“என்னுடைய மலக்குகளே ! அவர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு வைத்து, தராவீஹ் தொழுததற்குப் பிரதியாக என்னுடைய திருப்தியையும் மன்னிப்பையும் நான் வழங்கிவிட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சியாக்குகிறேன்” என்று அல்லாஹூ தஆலா கூறுகிறான்.

பிறகு அல்லாஹூ தஆலா அடியார்களை நோக்கி, ‘என்னுடைய அடியார்களே ! என்னிடம் நீங்கள் கேளுங்கள். என்னுடைய கண்ணியத்தின் மீதும், என் கம்பீரத்தின் மீதும் ஆணையாக இன்று உங்களுடைய இந்தக் கூட்டத்தில் உங்களுடைய மறுமையின் விஷயத்தில் எதனை நீங்கள் என்னிடம் கேட்டாலும் அதனை நிச்சயம் நான் கொடுத்திடுவேன். உங்களுடைய உலக விஷயத்தில் எதையேனும் நீங்கள் கேட்டால் அதில் உங்களுக்குப் பலன் தரும் விஷயத்தில் நான் கவனம் செலுத்துவேன். என்னுடைய கண்ணியத்தின் மீது ஆணையாக ! என்னுடைய கட்டளைகளை நீங்கள் நினைவில் கொண்டு கவனித்து வாழும் காலமெல்லாம் உங்களுடைய தவறுதல்களை நான் மறைத்திடுவேன். என் கண்ணியத்தின் மீதும் கம்பீரத்தின் மீதும் ஆணையாக ! நான் உங்களைக் குற்றவாளிகள், மேலும் காபிர்களுக்கு மத்தியில் கேவலப் படுத்தமாட்டேன் ; இழிவு படுத்தமாட்டேன். இப்பொழுது

“நீங்கள் மன்னிக்கப்பட்டவர்களாகத் திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் என்னைத் திருப்தியுறச் செய்தீர்கள். நான் உங்களைப் பொருந்திக் கொண்டேன்” என்று கூறுகிறான்.

இந்த உம்மத்தினர் ரமலான் மாதத்தை முடித்து ஈதுல் பித்ரைக் கொண்டாடும் நாளில் அல்லாஹூ தஆலா அவர்களுக்கு வழங்கிய வெகுமதியைக் கண்டு மலக்குகள் மகிழ்ச்சியடைந்து நற்செய்தி கூறுகின்றனர்” என்பதாக நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.
- நூல் : தர்ஃகீப்


யா அல்லாஹ் ! எங்களை அந்தக் கூட்டத்தில் உள்ளவர்களாக ஆக்கியருள்வாயாக. ஆமீன் !

நன்றி : தொகுப்பு நூல் : “அமல்களின் சிறப்புகள்”, பாகம் : ரமலானின் சிறப்புகள்.

இவன்.
M.முஹம்மது பதுருதீன்.

No comments: