Monday 5 November 2007


ஹஜ் செய்வோம் விரைவில் செய்வோம்!


ஹஜ்ஜூடைய காலம் நெருங்கி வருவதால் உடலாலும் பொருளாலும் வசதிபடைத்தோர் ஹஜ் செய்வது அவசியமும் அவசரமும் ஆகும். வயதான பிறகு ஹஜ் செய்யலாம் என்ற எண்ணம் ஷைத்தானின் சூழ்ச்சியாகும். இக்காலத்தில் உடல் வலிமையாய் இருக்கும்பொழுது பண வசதி ஏற்பட்டால் தீனுக்கு முன்னுரிமை (ஹஜ்) தராமல் துனியாவிற்க்கு முக்கியத்துவம் (வீடு கட்டுவது, சொத்துக்கள் வாங்குவது,..) கொடுக்கப்படுகிறது. இதனால் வயதான காலத்தில் பணவசதி இருந்தால் உடல்வலிமை இழக்கப்படுகிறது அல்லது பணவசதியின்மை ஏற்பட்டுவிடுகிறது. அல்லாஹ் இத்தகைய நிலையிலிருந்து நம் அனைவரையும் பாதுகாத்தருள்வானாக. மேலும் எல்லா அமல்களையும் அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றும் வலிமையையும் வசதியையும் நமக்கு ஏற்படுத்தி தருவானாக. ஆமீன்.

இதன் அடிப்படையில் ஹஜ் செய்ய ஆர்வமூட்டும் மற்றும் செய்யாததின் பேரில் எச்சறிக்கை செய்யும் அல்லாஹ் ரசூலின் அறிவிப்புகள் கீழே தரப்படுகின்றது. அதனடிப்படையில் ஹஜ் கடமையான அனைவரும் ஹஜ்ஜை துரிதப்படுத்துவோமாக.


அல்லாஹ் கூறுகின்றான் :

அன்றி ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்வுக்காக நீங்கள் (நிறைவேற்றிப்) பூரணமாக்குங்கள்.
அல்குர்ஆன் (2 :196)


இறையில்லம் கஃபா


நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் :

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருவாய் மலர்ந்தருளியதாக ஹஜ்ரத் அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எவர் அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜூ செய்து அதில் துர்வார்த்தை பேசாமலும் தீமையான காரியம் (அதாவது தீனுக்குப் புறம்பான செயல்) செய்யாமலும் ஹஜ்ஜிலிருந்து திரும்புவாரோ, அவர் தமது தாயுடைய வயிற்றிலிருந்து அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புகிறார்.
(நூல் : புகாரி-முஸ்லிம்-மிஷ்காத்)

ஹஜ்ரத் அபூஹூரைரா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருள் வாக்கை அறிவிக்கிறார்கள் : நன்மைகள் நிறைந்த ஹஜ்ஜின் பிரதிபலன் சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை.
(நூல் : புகாரி,முஸ்லிம்)

நபிகள் கோமான் (ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் புரைதா (ரலி) அவர்கள் அறிவுக்கின்றார்கள் : ஹஜ்ஜில் செலவழிப்பதைப் போன்று ஒன்றுக்கு (ஒரு ரூபாய்க்கு) பதிலாக எழுநூறு (ரூபாய்களாக) கிடைக்கும்.
(நூல் : அஹ்மத், தப்ரானி, பைஹகீ, தர்கீப்)


ஹஜ்ஜூக்குப் போகாமலிருப்பது பற்றிய எச்சரிக்கை :

அல்லாஹ் கூறுகின்றான் :

(இவ்வுலகில், இறைவனை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு அமைக்கப்பெற்ற ஆலயங்களில் முதன்மையானது நிச்சயமாக " பக்கா"வில் (மக்காவில்) இருப்பதுதான். அது (ஆசீர்வதிக்கப்பட்டதாகவும்,) மிக்க பாக்கியமுள்ளதாகவும், உலகத்தாருக்கு நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.
(அல்குர்ஆன் : 4 :3 :96)

அதில் தெளிவான அத்தாட்சிகளும் இருக்கின்றன. இப்ராஹீம் (தொழுகைக்காக) நின்ற இடமும் இருக்கின்றது. எவன் அதில் நுழைகின்றானோ அவன் (அபயம் பெற்று) அச்சமற்றவனாகிவிடுகின்றான். ஆகவே, எவர்கள் அங்கு பிரயாணம் செல்ல சக்தியுடையவர்களாக இருக்கின்றார்களோ, அத்தகைய மனிதர்கள் மீது ; அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அவ்வாலயத்தை ஹஜ்ஜூ செய்வது கடமையாகும். (இதை) நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்துவிடுவதில்லை. ஏனென்றால்,)நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார் யாவரின் தேவையற்றவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4 :3 :97)

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

ஹஜ்ரத் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அருள் மொழி பகர்ந்ததாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எந்த ஒரு மனிதருக்கு ஏதேனும் உண்மையான வெளிப்படையான தவிர்க்கமுடியாத தேவையால் ஹஜ்ஜூ செல்ல விலக்கு இல்லாமலும், கொடுமைக்கார அரசனால் தடை ஏதும் ஏற்படாமலும், அல்லது ஹஜ்ஜிலிருந்து தடுத்துவிடக்கூடிய கடுமையான நோய் ஏதும் இல்லாமலும் இருக்க அவர் ஹஜ்ஜூ செய்யாமலே மரணிப்பாரானால் ; அவர் யூதனாகவோ, கிறிஸ்தவனாகவோ மரணமடைந்து கொள்ளட்டும்.
(நூல் : தாரமீ-மிஷ்காத்-இத்திஹாப்)


மேற்கண்ட ஹதீஸை சற்று சிந்திப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில் நமது நாயகம் (ஸல்) அவர்கள் தமது உம்மத்தினர் மீது எவ்வளவு கருனையுள்ளம் கொண்டவர்கள் என்பதை அனைவரும் அறிந்ததே. அக்கருனையுள்ளம் கொண்ட நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜூக்கு செல்லாதவர்களின் விஷயத்தில் கூறிய எச்சரிக்கையின்படி ஹஜ்ஜூக்கு செல்வது எவ்வளவு அவசியமும் அவசரமும் ஆகும் என்பதை நாம் உணரலாம். அத்தகைய துர்பாக்கிய நிலையிலிருந்து நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாத்தருள்வானாக. ஆமீன்.

ஹாஜிகளின் சிறப்பு :

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருவாய் மலர்ந்தருளியதாக ஹஜ்ரத் அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள் : ஹஜ்ஜூ செய்பவரும் உம்ரா செய்பவரும் அல்லாஹ்வுடைய தூதுவர்கள் ஆவார்கள். அவர்கள் துஆக் கேட்பார்களாயின் அல்லாஹூதாலா அதனை ஏற்றுக் கொள்வான். அவர்கள் பாவ மன்னிப்பு கேட்பார்களாயின் அவர்களின் பாவங்களை மன்னித்து விடுவான்.

(நூல் : மிஷ்காத்)

இது மிகப்பெரிய பாக்கியமாகும். ஹாஜிகளின் துஆவில் நம்மையும் சேர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்வது மிகவும் அவசியமாகும். மேலும் இச்சிறப்புக்குரிய ஹாஜிகளாக நமது பெற்றோர்கள் இருப்பார்களேயானால் இச்சிறப்பு இரட்டிப்பாகிவிடுகிறது. ஏனெனில் தனது பிள்ளைகளுக்காக கேட்கும் பெற்றோர்களின் துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான் என ஒரு ஹதீஸில் வந்துள்ளது. நமது பெற்றோர்கள் ஹஜ்ஜூக்கு இதுவரை செல்லாமல் இருப்பார்களேயானால் அவர்களுக்காக துஆ செய்துகொண்டு தஃவதும் கொடுத்துவரவேண்டும்.

நபி (ஸல்) அவர்களை ஜியாரத் செய்வதின் சிறப்பு :


ஹதீஸ்களை பலவீனப்படுத்துவதையே தனது தொழிலாக கொண்ட பலவீனக்கூட்டங்கள் தோன்றி நபி (ஸல்) அவர்களை ஜியாரத் செய்யதேவையில்லை எனக்கூறி வருவதை தூக்கியெறிந்துவிட்டு, நபி (ஸல்) அவர்களை ஜியாரத் செய்ய செல்கிறோம் என்ற மனத்தூய்மையோடு சென்று அன்னாரின் ஷபாஅத்தை பெறும் பாக்கியத்தை அடைவோமாக.

நபி (ஸல்) அவர்களின் ரெளலா ஷரீஃப்


நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்களின் வாயிலாக அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருள்வாக்கு அறியப்படுவதாவது : ‘எவர் என்னை தரிசிக்க வருவாரோ, மேலும் அஃதல்லாத வேறு எந்த நிய்யத்தும் அவருக்கு இல்லையானால், அவருக்காக சிபாரிஷ் செய்வது என்மீது கடமையாகி விட்டது.’

(அறிவிப்பவர் : தப்ரானி)

ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் மூலம் கிடைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருள்வாக்காவது : ‘எவர் என்னுடைய மரணத்திற்குப் பிறகு என்னை ஜியாரத்துச் செய்வாரோ, அவர் என் வாழ்நாளிலேயே என்னை ஜியாரத்துச் செய்தவர் போலாவார்.’
(அறிவிப்பவர் : தப்ரானி, தாருகுத்னி)

ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழியை எடுத்தியம்புகின்றார்கள் : எவர் ஹஜ்ஜூ செய்த பின்னர் என்னை ஜியாரத் செய்யவில்லையோ, அவர் என் மீது அநியாயம் செய்தவராவர்.
(அறிவித்தவர் : இப்னு அதிய்யா (ரலி) ; நூல் : இத்திஹாப்)

எனவே யாருக்கெல்லாம் ஹஜ் செய்வது கடமையாகிவிட்டதோ காலம் தாழ்த்தாமல் உடனே சென்றுவிடுவது அவசியமாகும். ஹஜ்ஜூக்கு செல்லும் ஹாஜிமார்கள் என்னையும் தங்களின் துஆவில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இச்சிறு முயற்சியின் மூலமாக அல்லாஹ் யாருக்காவது ஹஜ் செல்லும் பாக்கியத்தை தருவான் என ஆதரவு வைக்கின்றேன். வஆகிர தஃவானா வஅனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாம்.

இவன்.
முஹம்மது பதுருதீன்.