Friday 23 January 2009


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

தொழுகையின் சிறப்புகள்!

தொழுகை பரிபூரணமாகத் தேவையான விஷயங்கள் :

ஸூஃபியாக்கள் என்னும் ஞானமேதைகள் கூறுவதாவது : தொழுகையில் பன்னிரண்டாயிரம் விஷயங்கள் உள்ளன. அல்லாஹ் அவை அனைத்தையும் 12 செயல்களில் அமைத்துள்ளான். தொழுகை முழுமை பெறவும், தொழுகையின் பலன்கள் முழுமையாகக் கிடைப்பதற்கும் அப்பன்னிரண்டையும் பேணுதலுடன் கடைப்பிடித்து வருவது அவசியம்.

1. மார்க்க அறிவு (இல்மு). "மார்க்க அறிவுடன் செய்யப்படும் குறைவான அமல் மார்க்க அறிவில்லாமல் செய்யப்படுகின்ற அதிகமான அமல்களை விடச் சிறந்ததாகும்." என்று நபி (ஸல்) அருளியள்ளார்கள்.
2. உலூச் செய்தல்.
3. உடை அணிதல்.
4. நேரம் அறிதல்.
5. கிப்லாவை முன்னோக்குதல்.
6. நிய்யத் செய்தல்.
7. தக்பீர் தஹ்ரீமா கட்டுதல்.
8. நிலை நிற்றல்.
9. குர்ஆன் ஓதுதல்.
10. ருகூஉ செய்தல்.
11. ஸஜ்தாச் செய்தல்.
12. இருப்பு இருத்தல்.

இவை அனைத்தும் முழுமை அடைவது இக்லாஸென்னும் மனத்தூய்மையினாலாகும். இப்பன்னிரண்டு செயல்களில் ஒவ்வொன்றிலும் மும்மூன்று பகுதிகள் உள்ளன.

1. (இல்மு) மார்க்க அறிவு சம்பந்தமான மூன்று பகுதிகள் :

1. பர்லுகள் எவை ? சுன்னத்துகள் எவை ? என்பதாகத் தனித்தனியே அறிந்து கொள்ளுதல்.
2. உலூவிலும், தொழுகையிலும் உள்ள பர்லுகள் எத்தனை ? சுன்னத்துகள் எத்தனை என்பதாகத் தெரிந்து கொள்ளுதல்.
3. ஷைத்தான் எந்தெந்த சூழ்ச்சியினால் தொழுகையில் குழப்பத்தை உண்டாக்குகிறான் ? என்று அறிந்து கொள்ளுதல்.

2. உலூவில் மூன்று பகுதிகள் :

1. வெளி உறுப்புகளைச் சுத்தப்படுத்துவது போல் உள்ளத்தையும் வஞ்சகம், பொறாமை ஆகிய தீய குணங்களை விட்டும் சுத்தப்படுத்துதல்.
2. வெளி உறுப்புகளை அழுக்கைவிட்டும் தூய்மைப்படுத்துவது போல் பாவங்களைவிட்டும் தூய்மைப்படுத்துதல்.
3. உலூவில் அளவுக்கு அதிகமாகவோ அளவைவிடக் குறைவாகவோ செய்யாமலிருத்தல்.

3. உடை சம்பந்தமான மூன்று பகுதிகள் :

1. ஹலாலான சம்பாத்தியத்தால் வாங்கியதாக இருப்பது.
2. சுத்தமாக இருப்பது.
3. சுன்னத்தான முறைப்படி அணிவது.
கரண்டைக்காலை மறைக்காமலும், பெருமை, ஆடம்பரம் இல்லாமலும் அணிவதாகும்.

4. நேரம் அறிவதில் மூன்று பகுதிகள் :

1. சரியான நேரங்களைத் தெரிந்து கொள்வதற்கு வெயில், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் கணக்குகனைக் கணித்து அறிந்து கொள்வது. (இக் காலத்தில் நேரங்களை அறியக் கடிகாரமுள்ளது.)
2. பாங்கு சொல்லப்படும் நேரத்தைக் கவனத்தில் வைப்பது.
3. தொழுகையின் நேரங்களை எப்பொழுதும் மனதில் எண்ணங்கொண்டிருப்பது. ஏனெனில், நம்மை அறியாமலேயே தொழுகை நேரம் தவறி விடாமலிருக்க வேண்டும்.

5. கிப்லாவை முன்னோக்குவதில் மூன்று பகுதிகள் :

1. வெளி உறுப்புகள் அனைத்தையும் கிப்லாவை முன்னோக்கி வைப்பது.
2. உள்ளத்தால் அல்லாஹ்வை முன்னோக்கி நிற்பது. ஏனெனில் உள்ளத்தின் கஃபா
அவனாகும்.
3. எஜமானனுக்கு முன்னால் எவ்வாறு உடல் முழுவதையும் முன்னோக்கி வைத்திருக்க வேண்டுமோ அவ்வாறு முன்னோக்கி நிற்பது.

6. நிய்யத் செய்தலில் மூன்று பகுதிகள் :

1. எந்தத் தொழுகையைத் தொழுகிறோம் என்று விளங்குவது.
2. அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்கிறோம் என்பதாகவும், அவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதாகவும் எண்ணுதல்.
3. அல்லாஹ் நம்மனதின் நிலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என அறிதல்.

7. தக்பீர் தஹ்ரீமாவில் மூன்று பகுதிகள் :

1. அல்லாஹூ அக்பர் என்ற வாசகத்தைத் தெளிவாகவும், சரியாகவும் உச்சரித்தல்.
2. இரு கைகளையும் காதுகள் வரை உயர்த்துதல்.(இது அல்லாஹ்வைத் தவிர மற்றவை அனைத்தையும் என் பின்னால் எறிந்து விட்டேன் என்பதைச் சுட்டிக் காட்டுவதாகும்.)
3. அல்லாஹூ அக்பர் என்று கூறும் பொழுது அவனுடைய உயர்வையும், மகத்துவத்தையும் மனதிற் கொள்ளுதல்.

8. நிலை நிற்பதில் மூன்று பகுதிகள் :

1. நிலை நிற்கும்பொழுது ஸஜ்தாவின் இடத்தில் பார்வையைச் செலுத்துவது.
2. அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்பதாக மனதில் எண்ணங்கொள்வது.
3. வேறு எந்தப் பக்கமும் கவனம் செலுத்தாமல் இருப்பது.

தொழுகையில் ஈடுபட்டிருப்பவர் தன் கவனத்தைப் பல பக்கங்களிலும் செலுத்துவதற்குப் பெரியோர்கள் ஓர் உதாரணத்தைக் குறிப்பிடுகிறார்கள். ஒரு மனிதர் அரசனைச் சந்திக்க விரும்பி அரண்மனைக்குச் சென்று அங்குள்ள காவலர்களிடம் மிகவும் கெஞ்சிக் கேட்டு அனுமதி பெற்று அரசனின் தர்பாருக்கு செல்கிறார். அங்கு அரசன் இம் மனிதனைக் கவனிக்க ஆரம்பித்த பொழுது இவர் தம் கவனத்தை அங்குமிங்கும் செலுத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அரசன் இவர் பக்கம் எவ்வாறு கவனம் செலுத்துவான் ? இவ்வாறுதான் தொழுகையில் அங்குமிங்கும் கவனம் செலுத்துபவரின் நிலையும் ஆகிவிடும்.

9. கிராஅத் ஓதுவதில் மூன்று பகுதிகள் :

1. குர்ஆனை ஓதும் முறையறிந்து ஒதுதல்.
2. அதன் பொருளைச் சிந்தனையில் கொண்டு ஓதுதல்.
3. அதன் படிச் செயலாற்றுதல்.

10. ருகூஉச் செய்வதில் மூன்று பகுதிகள் :

1. இடுப்பும் தலையும் சமமாக இருக்கும் வண்ணம் குனிதல், மேலே உயர்த்தாமலும் கீழே தாழ்த்தாமலும் முதுகைச் சமமாக வைத்தல் (தலை, முதுகு, ஆசனம் ஆகிய மூன்றும் சமமாக இருக்கும் நிலையில் குனிய வேண்டுமென்று உலமாக்கள் எழுதியுள்ளனர்.)
2. கைவிரல்களை விரித்தவாறு முழங்கால்களைப் பிடித்தல்.
3. ருகூஉடைய தஸ்பீஹூகளை கண்ணியத்துடனும் கம்பீரத்துடனும் கூறுதல்.

11. ஸஜ்தாச் செய்வதில் மூன்று பகுதிகள் :

1. இரு கைகளையும் காதுக்கு நேராக வைப்பது.
2. முழங்கை பூமியில் படாமல் தூக்கிவைப்பது.
3. தஸ்பீஹூகளைக் கண்ணியத்துடன் கூறுவது.

12. இருப்பில் மூன்று பகுதிகள் :

1. வலதுகாலை நட்டு வைத்து இடதுகாலைப் படுக்க வைத்து அதன்மீது உட்காருதல்.
2. கண்ணியத்துடனும் பொருள் விளங்கியும் அத்தஹிய்யாத்தை ஓதுதல். ஏனெனில், அதில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின்மீது சலாம் கூறுதலும், முஃமின்களுக்கு துஆச் செய்தலும் அமைந்திருக்கின்றன.
3. ஸலாம் கொடுக்கும் போது மலக்குகளுக்கும், வலப்பக்கம் இடப்பக்கம் இருப்பவர்களுக்கும் ஸலாம் கூறுவதாக நிய்யத் செய்தல்.

பின்னர் இப்பன்னிரண்டு செயல்களையும் நிரப்பமாக்கி வைக்கின்ற இக்லாஸ் என்பதிலும் மூன்று பகுதிகள் உள்ளன.

1. இத்தொழுகையின் மூலம் அல்லாஹ்வின் அன்பைப் பெறுவது மட்டும் நோக்கமாக இருப்பது.
2. அல்லாஹ்வின் நல்லுதவியினாலேயே இத்தொழுகையை நிறைவேற்ற முடிந்தது என்று விளங்குவது.
3. இதற்குரிய நன்மை கிடைக்குமென்று நம்பிக்கை வைப்பது.

உண்மையில் தொழுகையில் மிகப்பெரிய நன்மையும் பரக்கத்தும் இருக்கின்றன. அதிலுள்ள ஒவ்வொரு திக்ரும் ஏராளமான நன்மைகளையும் அல்லாஹ்வின் பெருமைகளையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. தொழுகையின் ஆரம்பத்தில் ஓதப்படும், "ஸூப்ஹானகல்லாஹூம்ம" என்ற ஃதனாவை எடுத்துக் கொள்ளுங்கள் ! அது எத்தனை சிறப்புகள் கொண்டுள்ளது என்பதைப் பாருங்கள்.

ஸூப்ஹானகல்லாஹூம்ம : யா அல்லாஹ் ! நீ மிகப் பரிசுத்தமானவன். குறைகள் அனைத்தையும் விட்டுத் தூய்மையானவனாகவும், தீமை அனைத்தையும் விட்டு நீங்கியவனாகவும் இருக்கிறாய் !

வபி ஹம்திக : புகழுக்குரிய, வாழ்த்துக்குரிய எத்தனை விஷயங்கள், இருக்கின்றனவோ அவை அனைத்தும் உனக்கே உரியன !

வதபாரகஸ்முக : உன்னுடைய திருநாமம் பரக்கத்துடையதாகும். உன் திருநாமம் கூறப்பட்ட பொருளும் பரக்கத்துடையதாகிவிடும்.

வ(த்)தஆலா ஜத்துக : உன் அந்தஸ்தும் மகத்துவமும் மிக்க உயர்வானதாகும்.

வலா இலாஹ ஃகைருக : வணக்கத்திற்குரியவன் உன்னையன்றி யாருமில்லை, வணங்குதற்குரிய நாயன் உண்ணையன்றி எங்கும் எப்போதும் கிடையாது.

இவ்வாறே, ருகூவில் ‘ஸூப்ஹான ரப்பியல் அளீம்’ மகத்துவமும் மதிப்பும் மிக்க என்னுடைய இரட்சகன் குறைகள் அனைத்தை விட்டும் பரிசுத்தமானவன் என்பாதாகக் கூறி அவனுடைய உயர்வுக்கு முன்னால் தன்னைத் தாழ்மைப் படுத்தித் தன் இயலாமையை வெளிப்படுத்திக் காட்டுதலாகும். கழுத்தைத் தூக்கி தலை நிமிர்ந்து நிற்பது அகம்பாவம், பெருமையின் அடையாளமாகும். அதனைத் தாழ்த்திக் குனிவது வழிப்படுவதைக் குறிப்பதாகும். எனவே, ருகூவில் குனிவது, "உன்னுடைய சட்டங்களுக்கு முன்னால் நான் குனிந்துவிட்டேன். உனக்கு வழிப்படுவதையும், வணக்கம் புரிவதையும் என் தலைமீது ஏற்றுக் கொண்டேன். பாவங்கள் நிறைந்த என் உடல் உன் முன்னால் ஆஜராக உள்ளது. உன் சன்னிதானத்தில் நான் குனிந்து விட்டேன். நிச்சயமாக நீ உயர்வு மிக்கவன். உன் உயர்வின் முன்னால் நான் தலை வணங்கி நிற்கிறேன்" என்று விண்ணப்பித்துக் கொள்வதாகும்.

இவ்வாறே, ஸஜ்தாவில் ‘ஸூப்ஹான ரப்பியல் அஃலா’ என்பதிலும் அல்லாஹூத்தஆலாவுடைய எல்லையில்லா உயர்வையும், அவன் குறைகள் அனைத்தை விட்டும் பரிசுத்தமானவன் என்பதையும் தெரிவிக்கிறோம். மனிதனின் உறுப்புகளில் அனைத்து உறுப்புகளிலும் சிறந்த உறுப்பாகிய சிரசையும், அதிலுள்ள கண், காது, மூக்கு, நாக்கு போன்ற அவனுக்குப் பிரியமான உறுப்புகளையும் அல்லாஹ்வின் முன்னால் தரையில் போட்டுவிடுவது, "யாஅல்லாஹ் ! என்னுடைய உயர்தரமான, எனக்கு மிக விருப்பமான இந்த உறுப்புகளையெல்லாம் உன் சமூகத்தில் ஆஜராக்கி உனக்கு முன்னால் அவற்றைத் தரையில் கிடத்திவிட்டேன். எனவே, நீ என்மீது கருணைகூர்ந்து இரக்கம் காட்டுவாய் என்ற நம்பிக்கை கொண்டுள்ளேன்" என்று விண்ணப்பிப்பதைப் போன்று அமைந்திருக்கிறது. இந்தப் பணிவு முதன்முதலாக அவனுக்கு முன் கைகட்டி மரியாதையுடன் நிற்பதின் மூலம் வெளிப்படுத்தப் படுகிறது. பிறகு இன்னும் கொஞ்சம் அதிகமாக அவனுக்கு முன்னால் தரையில் மூக்கையும் தலையையும் வைத்து அழுத்துவதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

தொழுகையின் நிலைகள் அனைத்தும் இவ்வாறே அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு தொழுவதுதான் தொழுகையின் அசல் வடிவமும், இம்மை மறுமையினுடைய வெற்றிக்குரிய படிகளுமாகும். ஸஆபிகள், பெரியோர்கள் அனைவரின் தொழுகையும் இவ்வாறே இருந்தது. ‘அவர்கள் தொழுகையில் நின்றால் அல்லாஹ்வைப் பயந்து நடுங்குபவர்களாக இருந்தார்கள்’ என்று முஜாஹித் ரலியல்லாஹூ அன்ஹூ குறிப்பிடுகிறார்கள். அல்லாஹ் தன் அன்பினால் எனக்கும் மற்றுமுள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் இதன்படி தொழுவதற்குரிய நல்லுதவியைத் தந்தருள்வானாக !

(தொகுப்பு நூல் : அமல்களின் சிறப்புகள். பாகம் :தொழுகையின் சிறப்புகள்.)



யாஅல்லாஹ் ! உனது அருமை நபி(ஸல்) அவர்களின் கண்களுக்கு குளிர்ச்சி தந்ததும், உனது மன்னிப்பையும் பொருத்தத்தையும் பெற்றுத்தருவதுமான இந்த மேலான தொழுகையை எங்களது வாழ்க்கையில் நிலையானதாகவும் நிரப்பமானதாகவும் ஆக்கியருள்வாயாக ! ஆமீன் யாரப்பல் ஆலமீன். வ ஆகிர தாவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

" நிச்சயமாக முஃமின்கள் வெற்றி அடைந்துவிட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால் தம்தொழுகையை உள்ளச்சத்தோடு நிறைவேற்றுவார்கள்."

(அல் குர்ஆன் :18 :23 :1,2)



இவன்.
முஹம்மது பதுருதீன்.