Wednesday 26 September 2007

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

அக்கால சஹாபிகளும் இக்கால ஆசாமிகளும்


தீன் தாவத் உழைப்புகள் நடைபெற்று அல்லாஹ்வின் உதவிகள் முஸ்லிம்களுக்கு கிடைத்த அக்கால நிலைகளையும், தீன் உழைப்பு நடைபெறாத இக்கால நிலைகனையும் சற்றே ஒப்பிட்டு பார்த்தால் நாம் எவ்வளவு பின்தங்கியுள்ளோம் என்பது விளங்கும்.

சகல அந்தஸ்துகளிலும் தாழ்ந்திருந்த அரபுகள் தீன் தஃவத் உழைப்பை மேற்கொண்டதின் காரணமாக உலகிலேயே உயர் அந்தஸ்துடையவர்களாக திகழ்ந்தனர். ஆனால் இன்றோ எவர்களை அல்லாஹ்வே "நீங்கள் தாம் உயர்ந்தவர்கள்" என்று கூறினானோ அந்த முஸ்லிம்கள் ; அல்லாஹ் யாரைப்பார்த்து பிற்பட்டவர்கள் எனக் கூறினானோ அந்த காபிர்களிடம் "எங்களை பிற்பட்ட சமுதாயத்தினர் பட்டியலில் சேர்த்து எங்கள் மீது கருணை காட்டுங்கள்" என்று தாழ்ந்து பணிந்து விண்ணப்பம் செய்கின்றனர்.

தஃவத் உழைப்பு நடைபெற்ற அக்கால முஸ்லிம்களை கலிமா பாவங்களை விட்டு தடுத்தது தஃவத் உழைப்பு நடைபெறாத இக்கால முஸ்லிம்களின் கலிமா இவர்களை தீனை. விட்டே தடுத்துவிட்டது. அன்றைய முஸ்லிம்கள் ஈமானுக்காக அரச பதவியையும் உதறித் தள்ளினார்கள். ஆனால் இன்றைய முஸ்லிம்கள் ஒரு பியூன் வேலைக்காகவும் ஈமானையும் உதறித்தள்ள தயார். அன்று முஸ்லிம்கள் தீனுக்காக உயிர் கொடுக்கவும் துடித்தனர். ஆனால் இன்று முஸ்லிம்கள் தீன் உழைப்பிலிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டு தப்பி ஓட்டம் பிடிக்கின்றனர்.

சஹாபாக்கள் இலைதழை சாப்பிட்டும் தீன் சேவை செய்தனர் ! இன்று வயிறு நிறைய சாப்பிட்டதை ஜீரணிக்க டீ இலை குடித்து வெற்றிலை மென்று தின்ற பிறகும் தீன் வேலைக்கு முன் வருவதில்லை. அன்றைய முஸ்லிம்கள் தீனை உலகெங்கும் பரத்தினார்கள். இன்றைய முஸ்லிம்கள் உலகெங்கும் தீனுக்கு அவச்சொல்லை பெற்றுத்தருகின்றனர். சஹாபாக்கள் பெறும் பெறும் நல்ல அமல்களைச்செய்துவிட்டு அல்லாஹ்வின் சந்நிதானத்தில் அஞ்சி அழுதனர். இன்று பெறும் பெறும் பாவங்களைச் செய்த பிறகும் முஸ்லிம்கள் சிரித்து சந்தோஷப்படுகின்றனர்.

அன்று சஹாபாக்கள் மெஹ்ராஜில் தொழுகை கடமையாக்கப்பட்டதை அறிந்து ஈத் பிறையைக் கண்ட சிறுவர்களை போல் சந்தோஷத்தால் குதித்தனர். இன்று கஷ்த் ஜமாஅத் பள்ளிக்கு அழைத்தும் ‘என்னையா மஸ்ஜிதிற்கு தொழுக அழைக்கிறீர் !’ என முஸ்லிம்கள் கோபத்தால் குதிக்கின்றனர்.

அக்காலத்தில் மக்கள் தீனைத்தேடி நாடு நகரம் என்று சுற்றி அலைந்தனர். இக்காலத்தில் தீனுக்காக கஷ்து ஜமாஅத் வீட்டு வாசலைத் தேடி வந்தாலும் முஸ்லிம்கள் ஓடி ஒளிந்து கொள்கின்றனர். அன்று தொழுகை பாவங்களை நீக்கி முஸ்லிம்களை பரிசுத்தப்படுத்தியது. இன்று முஸ்லிம்களின் பாவங்களே அவர்களை தொழுவதிலிருந்து தடுத்து விட்டது. சஹாபாக்கள் கடையிலும் அல்லாஹ்வை தியானித்தனர். இன்றைய முஸ்லிம்கள் தொழுகையில் கடைபற்றி நினைக்கின்றனர்.

அன்று சஹாபாக்கள் சபிக்கப்பட்ட பஜார்களையும் மஸ்ஜிதின் சூழ்நிலை போல் ஆக்கினார்கள். இன்று மஸ்ஜிதுகளையும் பஜார் போல் ஆக்கிவிட்டனர்.சஹாபாக்களுக்கு அல்லாஹ்விற்கு பிரியமான இடமாகிய மஸ்ஜிதிலேயே அதிகம் இருக்க ஆசை. இன்றோ நமக்கு ஷைத்தானுக்கு பிரியமான பஜாரில் அதிகம் இருக்க ஆசை. சஹாபாக்கள் வீட்டில் அல்லாஹ்வை பயந்த அளவு இன்று நாம் பள்ளியிலும் பயப்படுவதில்லை.

சஹாபாக்கள் பள்ளிக்கு போனால் எப்பொழுது திரும்ப வீட்டிற்கு வருவார்கள் என சொல்ல முடியாது. ஆனால் பஜாருக்கு போனால் உடன் திரும்பிவிடுவார்கள் என சொல்லி விடலாம். இன்று நாம் பஜாருக்கு போனால் எப்பொழுது திரும்ப வீட்டிற்கு வருவோம் என்பது தெரியாது. ஆனால் பள்ளிக்குப் போனால் உடன் திரும்பி விடுவோம் என்பது நிச்சயம்.

அன்று வனாந்தரத்திலிருந்த ஆட்டுடையன் கூட அல்லாஹ் என்னைப் பார்க்கிறான் என பயந்து மோசடியாக ஆட்டை விற்கவில்லை. இன்று மஸ்ஜிதில் செருப்புகளைத் திருடி அவற்றை விற்றுப் பிழைக்கின்றனர். அன்றைய ஆட்டிடையன் "அமானத்தார்" இன்றைய நாட்டை ஆள்பவர்கள் "அவனமானத்தார்" தீன் உழைப்பு நடைபெற்ற அக்காலத்தில் தருமத்தின் பணப்பையை ஏழைகளின் வாசலில் இரவின் இருட்டில் கொண்டு வந்து கொடுத்துச் சென்றவர் யார் என்பது தெரியாமலிருந்தது. இன்றோ பஸ் நிறைய ஆட்கள் இருக்கும் போது பட்டப்பகலில் பணப்பையை எடுத்துச் சென்றவன் (பிக்பாக்கெட் அடித்தவன்) யார் என்பது தெரியாது.

அன்று இரவின் இருட்டில் வீட்டின் தனிமையில் பாலில் தண்ணீர் கலக்குமாறு தாய் சொன்னாலும் அல்லாஹ் பார்க்கிறான் என ஒரு பெண்மணி பயந்தார். இன்று பட்டப்பகலில் பலர்பார்த்துக் கொண்டிருக்கும்போதே தண்ணீரில் பாலை எப்படியோ கலந்து விடுகின்றனர்.

அக்காலத்தில் பால் விற்கப்பட்டால், பால் விற்கப்படும் பொருளா ? என்று ஆச்சரியப்பட்டார்கள். இன்று பால் இலவசமாக வினியோகிக்கப்பட்டால் ‘இலவசமா ?’ என எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள்.

அன்றைய முஸ்லிம்களை பார்த்ததும் அல்லாஹ்வின் நினைவு வந்துவிடும், இன்றைய முஸ்லிம்களைப் பார்த்ததும் துன்யா நினைவுக்கு வந்து விடும்.

அன்று சஹாபாக்கள் தீன் சாதனைகளைக் கொண்டு - இவர் பதரீன், இவர் உஹதில் கலந்து கொண்டவர் என அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று முஸ்லிம்கள் உலக அந்தஸ்துகளைக் கொண்டு – இவர் ஜமீன்தார், பெரிய வியாபாரி, பெரிய அதிகாரி, டாக்டர், வக்கீல் என – அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.

அன்று தங்கம் வெள்ளியாலான நாணயங்களின் மீதும் முஸ்லிம்களுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. அல்லாஹ்வைக்கொண்டே சகலதும் ஆகும் என நம்பிக்கை இருந்தது. இன்று வெறும் காகித நோட்டுகளின் மீதும் முஸ்லிம்களுக்கு பலமான எகீன் உண்டாகிவிட்டது.

சஹாபாக்கள் இஸ்லாத்தைத் தழுவியபின் அவர்களின் பெயர்கள் மாற்றி வைக்கப்படவில்லை. ஹஜ்ரத் அபூபக்கர், ஹஜ்ரத் உமர் இஸ்லாத்திற்கு முன்பும் அதே பெயர்தான். ஆனால் அவர்களின் செயல்கள் மாறிவிட்டன. இன்று புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ஒருவருடைய பெயரை மாற்றி முஸ்லிம் பெயராக வைத்துவிட்டால் பெரிய காரியம் செய்துவிட்டதாக நினைக்கப்படுகிறது. அவர் பழைய செயல்களை செய்து கொண்டிருந்தாலும் ஏதும் கவலைப்படுவதில்லை.

சஹாபாக்களுக்கு தீன் இனிமையாக தோன்றியது. காரணம் அவர்களின் ஈமான் ஆரோக்கியமாக வலுவாக இருந்தது. இன்று நம்மவருக்கு தீன் கசப்பாக இருக்கிறது. காரணம் நமது ஈமானில் வியாதி ஏற்பட்டு பலஹீனமாக உள்ளது. காய்ச்சல் காரனுக்கு லட்டு, ஜிலேபி போன்ற இனிப்பும் கசப்பாய் தெரியும். பிரியானியும் சாப்பிட பிடிக்காது.

சஹாபாக்கள் உலகப்பொருட்கள் தம்மிடம் திரண்டு வருவதைக்கண்டு தீன் உழைப்பிற்கான பிரதிபலன் உலகிலேயே கிடைத்துவிட்டதோ என அஞ்சி அழுதனர். ஆனால் இன்று நாமோ தீன் உழைப்பிற்கான பிரதிபலன் நமது வியாபாரத்திலும் விவசாயத்திலும் பரக்கத்தாக வெளிப்பட வேண்டுமென ஆசைப்படுகிறோம். அதற்காக கடையில் யாசீன் ஓதப்படுகிறது.

அக்காலத்தில் தனது சொத்து, செல்வம், பணங்காசு அனைத்தும் பறி போனாலும் பாதகமில்லை. தனது மானம் காக்கப்பட வேண்டுமென்ற தன்மான உணர்ச்சி மிகைத்திருந்தது. ஆனால் இக்காலத்தில் மக்கள் தனது மானத்தை விற்றேனும் பணங்காசு சம்பாதிக்கும் இழிநிலைக்கு தாழ்ந்து விட்டனர்.

அன்று தன்னந்தனியாக ஒரு பெண் தனது அழகு ஆபரணங்களுடன் ஹீரா நகரிலிருந்து ஹஜ்ஜூக்கு சென்று திரும்பினாலும் அவளை ஏறிட்டுப் பார்க்கவும் எவருக்கும் துணிவில்லை. ஆனால் இன்றோ அடுத்த முஹல்லாவுக்குக் கூட ஒரு பெண் பாதுகாப்பாக போக முடியாது.

அன்று ஒரு தாய் இறந்துபோன தனது சின்னஞ்சிறு மகனையும் தொழுகையின் வாயிலாக உயிர்ப்பித்து ஜனாஸாவிலிருந்து எழுப்பி உட்காரவைத்துக் காட்டினார். ஆனால் இன்றுள்ள தாய்மார்களோ சுப்ஹூ தொழுகையை விட்டுவிட்டு தூங்கும் தம் பிள்ளைகளை தொழுக எழுப்புமளவு கூட ஈமானில் சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்.

சஹாபாக்களின் வியாபாரம் நம்முடைய தொழுகையைக் காட்டிலும் மிக மேலானதாக இருந்தது. ஏனெனில் அவர்களுடைய வியாபாரத்தில் அல்லாஹ்வின் தியானம் நிறைந்திருந்தது. ஆனால் இன்று நம்முடைய தொழுகையில் வியாபாரத்தின் தியானம் நிரம்பியுள்ளது. சஹாபாக்கள் வியாபாரத்திற்காக சென்ற இடமெல்லாம் தீனை பரப்பினார்கள். இன்று நாம் தீனுக்காக செல்லும் இடங்களிலெல்லாம் வியாபார தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு திரும்புகிறோம். சஹாபாக்கள் சிறு தொகையினராக இருந்தும் கைசர், கிஸ்ரா போன்ற சாம்ராஜ்யங்கள் அவர்களின் காலடியில் வீழ்ந்து கிடந்தன. ஆணால் நாம் இன்று பெருந்தொகையினராக இருந்தும் இஸ்ரேல் போன்ற சிறிய நாட்டிற்கும் பயந்து நடுங்குகிறோம்.

சஹாபாக்கள் காபிர் முஷ்ரிகுகளின் அவ்லாதுகளாக இருந்தும் மிக உயர்ந்த ஈமானை அடைந்து கொண்டனர். நாமோ பரம்பரை பரம்பரை முஸ்லிம்களின் அவ்லாதுகளாக இருந்தும் ஈமானின் மிக பலஹீனமான நிலையை அடைந்து கொண்டோம். சஹாபாக்களும் கஷ்டத்தை சகித்தனர் இன்றும் நாமும் கஷ்ட நஷ்டத்தை சகிக்கத்தான் செய்கிறோம். ஆனால் சஹாபாக்கள் தமது ஆன்மாக்களை பரிசுத்தப்படுத்திக் கொள்ளும் புனித பாதையின் கஷ்டங்களை சகித்தனர். இன்றுள்ள முஸ்லிம்கள் தாம் செய்யும் பாவங்களின் காரணமாக இறங்கும் கஷ்டங்களை சகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். சஹாபாக்களின் பேச்சைக்கேட்டு காட்டு மிருகங்களும் காட்டைவிட்டு வெளியேறின. ஆனால் இன்றுள்ள முஸ்லிம்களின் பேச்சை "மிருகங்களை விட கேவலமானவர்" என அல்லாஹ் எவர்களை குறிப்பிட்டானோ அந்த இறை மறுப்பாளர்களும் கேலி கிண்டல் செய்து சிரிப்பதுடன் முஸ்லிம்களை நாட்டை விட்டே வெளியேறுங்கள் என சப்தமிடுகின்றனர். சஹாபாக்கள் தீனின் மீது உழைத்ததினால், எவ்வித சாதனங்களும், வாகனங்களும் இன்றியே உலகெங்கும் தீனுக்காக பரவிச் செல்வது அவர்களுக்கு எளிதாக இருந்தது. ஆனால் நாம் இன்று தீனின் உழைப்பை விட்டதினால் வீட்டிலிருந்து பள்ளிவரை செல்வதும் கஷ்டமாக தோன்றுகிறது. சைய்யிதினா அபூபக்கர்(ரலி) அறியாமைக் காலத்திலும் ஷைத்தானை பின்பற்றியதில்லை. ஆனால் நாமோ ஹிதாயத்தின் காலத்திலும் ஷைத்தானை பின்பற்றுகிறோம்.

அன்று ஒரு முஹத்திஸ் மையை உலர்த்த தான் வாடகைக்கு இருந்த வீட்டின் சுவற்றிலிருந்து ஒரு சிட்டிகை மண்ணைக்கூட எடுக்க பயந்தார். இன்று வாடகை வீட்டில் வந்ததும் வீடு எனக்கே சொந்தம் என்கின்றனர். எப்படியும் வெளியேற்ற வேண்டுமானால் பகிடி கொடுக்காமல் ஒரு அடி கூட வெளியில் எடுத்து வைக்கமாட்டேன் என்கின்றனர்.

ஹஜ்ரத் தல்ஹா(ரலி) அவர்களுக்கு நபில் தொழுகையில் பைரஹா தோட்டத்தின் நினைவு வந்ததும் அத்தோட்டத்தை வக்பு செய்து விட்டார்கள். இன்று நமக்கு பர்ளு தொழுகையில் நமது கடை அல்லது தோட்டம் நினைவுக்கு வருமேயானால் அதை வக்பு செய்ய துணிவோமா ?

சஹாபாக்கள் பைத்துள் முகத்திஸை பார்வையை தாழ்த்தி நடக்கும் ஒரு சுன்னத்தை உயிர்ப்பித்ததின் பேரில் இரத்தம் சிந்தாமல் வெற்றி கொண்டனர். இன்று பல லட்சம் பேர் இரத்தம் சிந்தி பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தி போர்புரிந்தும் அதை வெற்றிகொள்ள முடியவில்லை.

ஆரம்பத்தில் சஹாபாக்கள் பசியின் காரணமாக தொழுகை சப்புகளில் நிற்கும்பொழுது மயங்கி விழுந்தார்கள். இன்று நாம் வயிறு நிறம்ப சாப்பிட்டதினால் உண்டான மயக்கத்தில் படுத்துறங்கி தொழுகையை விட்டுவிடுகிறோம்.

நெஞ்சின் மீது பாறாங்கல்லை வைத்தபின்னரும் சஹாபாக்கள் தீனை விட்டு மாறவில்லை இன்று யாராவது நெஞ்சிற்கு பாரமான ஏதேனுமொரு சொல்லை சொல்லிவிட்டாலும் நாம் தீன்வேலையை விட்டே தூரம் விலகி விடுகின்றோம்.

மெளலானா யூசுப் சாஹிப் (ரஹ்) கூறினார்கள் இன்று நாம் பார்க்கும் தீனின் நிலைமை இது சஹாபாக்களின் தியாகத்தின் பிரதிபலன் ஆகும். அதே சமயம் நாம் இன்று பார்க்கும் பத்-தீன் (தீன் அற்ற நிலை) இது நம்முடைய ஙப்லதின் (மறதியின்) பிரதிபலிப்பு ஆகும்.

சஹாபாக்கள் தாவதுடைய வேலை செய்தது தீனை உலகில் பரத்துவதற்காகவே இன்று நாம் தாவத் வேலை செய்வது தீனை நம்மிடம் காப்பாற்றிக் கொள்ளவேயாகும்.
மஸ்ஜிதே நபவியில் 9 வருடங்கள் விளக்கு எரியவில்லை. மஸ்ஜிது இருட்டு. ஆனால் சஹாபாக்கள் தீன் விளக்கம் பெற்ற ஒளி விளக்குகளாக திகழ்ந்தார்கள். அவர்களின் உள்ளங்களில் ஹிதாயத்தின் ஒளி மிளிர்ந்து கொண்டிருந்தது அந்த ஒளியை உலகம் முழுவதும் பரப்பினார்கள்.

இன்று மஸ்ஜிதுகள் மின்சார விளக்கு வெளிச்சத்தால் ஜகஜோதியாக பிரகாசிக்கின்றன. ஆனால் நமது உள்ளங்கள் இருண்டு கிடக்கின்றன. அந்த இருட்டை உலகம் முழுவதும் பரத்துகிறோம்.

சஹாபாக்கள் காலத்தில் மதீனாவில் இருந்த 12 பள்ளிகளிலிருந்து உலகெங்கும் தீன் பரவியது. இன்று உலகில் உள்ள கோடிக்கணக்கான பள்ளிகளிலிருந்து தீன் பரவவில்லை.

சஹாபாக்கள் தொழுகை சப்பில் சிறிது நேரம் நின்று விரிவான ரிஸ்கைப் பெற்றுக் கொண்டார்கள். இன்று நாம் ரேஷன் கியூவில் பலமணி நேரம் நின்றும் ஒரு கிலோ சர்க்கரை இரண்டு லிட்டர் மண்ணெண்ணை பெறுகிறோம். தொழுகை சப்பில் நிற்க தயாரில்லை.

இன்றைய முஸ்லிம்கள் சம்பாதித்து சம்பாதித்து வறியவர்கள் (ஏழைகள்) சஹாபாக்கள் செலவழித்து செலவழித்து செல்வத்தில் பெரியவர்கள்.

நாம் ஆயுள் முழுவதும் மனைவிக்குப் பக்கத்திலேயே இருந்துங்கூட இரண்டு மூன்று குழந்தைகள். அதிலும் இரண்டிற்கு மேல் வேண்டாம். ஒன்றே போதும், நாமே குழந்தை நமக்கேன் குழந்தை என்ற சுலோகங்களைப் பாடுகிறோம். சஹாபாக்கள் ஆயுளின் பெரும்பகுதி ஜிஹாதில் அல்லாஹ்வின் பாதையில் கழித்தார்கள். ஆனால் வீடு நிறைய குழந்தைகளை பெற்றனர்.

இன்றைய முஸ்லிம்கள் காகிதப்புலிகள் மாதிரி இருக்கின்றனர். அந்த காகிதத்தில் புளி கூட கட்டலாம். உண்மை புலி ஊருக்குள் வந்துவிட்டால் ஊரே கதிகலங்கிப் போகும். சஹாபாக்கள் உண்மையான புலிகளைப் போன்றிருந்தார்கள். அவர்களைக் கண்டு பெரிய பெரிய வல்லரசுகளும் நடுங்கின.

அன்று புலியும் ஆடும் ஒரே ஆற்றுநீரை அருகில் நின்றே குடித்தன. ஆட்டைபுலி அடிக்கவில்லை. இன்று ஒரே நாட்டை சேர்ந்த மக்கள் ஒரே ஆற்று நீருக்காக அடித்துக் கொல்கின்றனர். (காவிரி நீர்த்தகராறில் தமிழர்கள் கர்னாடகாவில் அடித்துக் கொல்லப்பட்டனர்)

மதீனாவில் ஒரு ஆட்டுத்தலை ஏழு வீடுகளுக்கு மாறிமாறிச் சென்று, திரும்ப முதல் வீட்டிற்கே வந்துவிட்டது. இக்காலத்தில் முதல் வீட்டிலிருந்தே வெளிப்படுமா என்பது சந்தேகம் !

சஹாபாக்கள் காலத்தில் ஜகாத் வாங்குவோர் யாருமில்லை. தேடி கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இன்று ஜகாத் சரியாக கணக்கிட்டு தருபவர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஹஜ்ரத்ஜீ மெளலானா யூசுப் சாஹிப் (ரஹ்) கூறினார்கள் : சஹாபாக்கள் நான்கு பைசா சம்பாதிக்க நாலாயிரம் மஸ்அலாக்களை விசாரித்தறிவார்கள். நாங்களோ நாலாயிரம் ரூபாய் சம்பாதிக்க நான்கு மஸ்அலாவைக் கூட விசாரிப்பதில்லை.

சஹாபாக்களின் ஈமான் மலையைப் போன்று உறுதியாக இருந்தது. அதனுடன் மோதிய பெரிய உலக சக்திகள் உடைந்து தூள்தூளாக சிதறின. இன்று நமது ஈமான் சிறியது உதிறியாக உள்ளது. இதனுடன் உலக சக்திகள் வந்து மோதும் போது நம் ஈமான் தூள்தூளாக சிதறிப் போகிறது. அக்காலத்தில் தஸ்பீஹ் ஓதியதால் உள்ளங்கள் பிரகாசமடைந்தன. இக்காலத்தில் தஸ்பீஹ் ஓதப்படுவதால் அந்த தஸ்பீஹ்யே பிரகாசமாகிவிடுகிறது. ஏனெனில் அது ரேடியம் தஸ்பீஹ். உள்ளம் என்னவோ இருண்டே இருக்கிறது.

தாவதுடைய உழைப்பு முழு உம்மத்திலும் நடைபெற்ற அக்காலத்தில் சாந்தி, சமாதானமும், பாசமும், நேசமும் மனிதர்களில் இருந்தன. அது இல்லாத இக்காலத்திலோ குரோதமும், விரோதமும், கலகமும், குழப்பமும், பதட்டமும், பரிதவிப்பும் பரவி மனித குலத்தின் உயிர் பொருளுக்கு எவ்வித பாதுகாப்பில்லாத அவல நிலை குவலயம் (உலகம்) முழுவதும் பரவியுள்ளது. தப்லீக் தஃவதுடைய உழைப்பை கை விட்டதினால் உண்டான நஷ்டம் எத்தகையது என்பதை மேற்கூறிய சில உதாரணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

(நன்றி நூல் : கஷ்தின் சிறப்பு வெளியீடு : இஸ்லாமிய பதிப்பகம்)

அல்லாஹ்வின் நல்லடியார்களே ! மேற்கூறப்பட்ட ஒப்பீடு நமது உண்மை நிலையை அறிய உதவும் ஓர் அளவுகோல். எப்பொழுது நாம் அல்லாஹ்வின் பொருத்தம் பெற்ற அந்த உத்தம சத்திய சஹாபாக்களின் நிலையை அடைய முயற்சிப்போமோ, அப்பொழுது நம் ஈமானில் வலிமையும், அல்லாஹ்வின் உதவியும் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சுன்னத்துகளை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை பின்பற்ற துடிக்கும் ஆர்வமும் நம்மிடையே ஏற்படும்.

அதற்கான முயற்சிதான் இக்கால கட்டத்தில் அல்லாஹ் நமக்கு ஏற்படுத்தி தந்த தப்லீக் தஃவத் உழைப்பாகும். நபிமார்களின் இந்த மேலான உழைப்பை நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்வமேயானால், அல்லாஹ்வின் உதவிகொண்டு இம்மை மறுமையில் வெற்றி பெற்றவர்களாகலாம். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான் :

"மக்களை நன்மையின் பக்கம் அழைத்து, நல்லதை ஏவித் தீயதை விலக்கும் ஒரு கூட்டம் உங்களில் இருப்பது அவசியம். அவர்கள் தாம் வெற்றி அடைந்தவர்கள்".

(அல்குர்ஆன் 3 :104)


"மனிதர்களில் தோன்றிய சமுதாயத்தினர்களில் நீங்கள்தாம் சிறந்த சமுதாயத்தினர். (ஏனெனில்) நீங்கள் நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கிறீர்கள். மேலும் அல்லாஹ்வை ஈமான் கொள்கிறீர்கள்".

(அல் குர்ஆன் 3 :110)


மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

"அல்லாஹூதஆலாவின் பாதையில் எவருடைய முகம் புழுதிபடிந்ததாக ஆகிவிட்டதோ, அவருடைய முகத்தை அல்லாஹூதஆலா கியாமத் நாளில் நிச்சயம் (நரக நெருப்பைவிட்டும்) பாதுகாப்பான். அல்லாஹூதஆலாவின் பாதையில் எவருடைய பாதங்கள் புழுதி படிந்ததாக ஆகிவிட்டதோ, அவருடைய இருபாதங்களையும் அல்லாஹூதஆலா இறுதித் தீர்ப்பு நாளன்று நரக நெருப்பைவிட்டும் (நிச்சயமாகப்) பாதுகாப்பான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(நூல் : பைஹகீ)



"அல்லாஹூதஆலாவின் பாதையில் ஒரு நாள் இருப்பது ஏனைய நாட்களில் ஆயிரம் நாட்களை விட மேலானது" என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் உஸ்மானிப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(நூல் : நஸாயி)



எனவே அல்லாஹுடைய பாதையாகிய தஃவத் தப்லீகில் சென்று மேலே கூறப்பட்ட அல்லாஹ் மற்றும் அவனுடைய ரஸூலின் அறிவிப்பிற்க்கு உடையவர்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கித்தந்தருள்வானாக. மேலும் மார்க்கத்தில் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் கூட்டத்தாரில் சேர்க்காமல் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாத்தருள்வானாக.ஆமீன். என துஆ செய்தவனாக இச்சிறு கட்டுரையை நிறைவு செய்கிறேன். வஆகிற தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாம்.

இவன்
முஹம்மது பதுருதீன்.