Sunday 8 July 2007

சுதர்ஸனுக்கு பதில் கடிதம்

இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் எனில்.....

அனைவருக்கும் வணக்கம்.

நான் மதங்களுக்கு அப்பாற்பட்டவன். மதங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் மக்களிடையே பகைமையையும், மூட நம்பிக்கைகளையும் வளர்க்கின்றன என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன்.

இஸ்லாம் மதத்தை வளர்க்க பி.ஜெய்னுலாபிதீன் என்ற இஸ்லாமிய பெரியவர் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளையும் நான் தவறாமல் பார்ப்பேன்.

சமீபத்தில் அவர் நடத்திய முக்காபுலா என்ற சாபம் இடும் நிகழ்ச்சியை பார்த்தேன். அதில் எழுந்த சந்தேகமே இக்கேள்வி.

கிறிஸ்த்தவத்தில் ஆதி மனிதன் செய்த பாவம் எல்லா மனிதர்கள் மீதும் தொடர்ந்து இருந்து வந்ததை தன் இரத்தத்தால் களையவே இயேசு சிலுவையில் உயிர் நீத்தார் என்ற கிறிஸ்த்தவ சித்தாந்தத்தை, "ஒருவர் பாவத்தை இன்னொருவர் சுமக்க இயலாது" என அறிவுக்கு இணங்கும் வகையில் அது தா நியாயமும் என இதே பி. ஜெயினுலாபித்தீன் பெரியவர் அறிவுப்பூர்வமாக வாதிட்டுள்ளது எனக்கு தெரியும்.

அவ்வாறிருக்க, இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் எனில், ஆண்கள் தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை நியாயப்படுத்த தங்களின் மனைவி மற்றும் ஒன்றும் அறியா பச்சிளம் குழந்தைகளின் மீது கடவுளின் சாபம் உண்டாகட்டுமாக என சாபமிடுவது எந்த வகையில் அறிவுக்கு பொருத்தமாக இருக்கிறது என விளக்க இயலுமா?

இவ்வாறு சாபம் கோர இஸ்லாம் தான் வழிகாட்டுகிறது எனில், இஸ்லாம் எந்த வகையில் அறிவுப்பூர்வமான மார்க்கமாகிறது என்பதையும் சற்று விளக்குங்களேன்.

நன்றி.

சுதர்ஸன்

அன்பு சகோதரர் சுதர்ஸனுக்கு !

பி.ஜெய்னுலாபிதீன் நடத்திய முபாஹலா நிகழ்ச்சியினால் தங்களுக்கு இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம்தானா ? என சந்தேகம் ஏற்பட்டுள்ளது, இதற்கு காரணம் இயேசு சிலுவையில் அறைந்ததையும் பி.ஜெ, நடத்திய முபாஹலா நிகழ்ச்சியையும் ஒன்றாக்கி பார்த்ததால்தான்.

முதலில் இரண்டுக்குமுள்ள வேறுபாட்டை கவனிப்போம். கிறிஸ்த்துவத்தில் சொல்வதுபோல் இயேசு பிறப்பதற்க்கு முன்னுல்ளோர் பாவங்களையும், அவர் வாழ்ந்த மற்றும் மறைந்தபின் உலகம் அழியும்வரை உள்ளவர்களின் பாவங்களையும் சேர்த்து களையவே சிலுவையில் உயிர் நீத்தார் என்று கூறுவது அறிவிற்க்கு அப்பாற்பட்டது என்றும், அவரவர் செய்த பாவத்திற்க்குத்தான் அவரவர் பொறுப்பு என்ற இஸ்லாமிய கொள்கைதான் அறிவுப்பூர்வமானது என்றும் தாங்கள் தெளிவாக அறிந்திருப்பீர்கள்.

ஆனால் p.j.யின் முபாஹலா நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்களைத்தவிர அவரவர்களின் மனைவி மக்களும் சேர்க்கப்படுவதால்தான் தங்களுக்கு இது அறிவுப்பூர்வமானதுதானா ? என சந்தேகப்பட வைக்கிறது. ஆனால் இந்த முபாஹலா அல்லாஹ் கூறும் அறிவுப்பூர்வமான எச்சரிக்கைவலை என்பதை இங்கு காண்போம்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் :

உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டாவாதம் செய்தால் " வாருங்கள் ! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம், நாங்களும் வருகிறோம், நீங்களும் வாருங்கள் ! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம் " எனக் கூறுவீராக !

அல்குர்ஆன் 3 :61
என்று கூறுகிறான்.

ஏனெனில் ஒருவர் பொய் அல்லது உண்மை சொன்னாரா என்பதை அல்லாஹ் அறிகிறான் முபாஹலா மூலம்தான் அல்லாஹ் அறியவேண்டும் என்றில்லை. ஆனால் ஒரு சமுதாயம் யார் சொல்வது உண்மையென்று அறியவேண்டுமெனில் சம்பந்தப்பட்டவர்கள் எந்தவிதமான வார்த்தைஜாலங்கள், விதன்டாவாதங்கள், பொய்கள் மற்றும் அவதூறுகள் முதலியவைகளை கூறி தப்பித்துவிடமுடியாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தினால்தான் உண்மையை அவர்களிடமிருந்து வெளிக்கொணர முடியும் என்பதால், அவரவர் தத்தமது மனைவிமக்களோடு வந்து இறைவனின் சாபத்தை வேண்ட சொல்கிறான்.

இங்கு மனைவி மக்களுக்கும் சேர்த்து சாபத்தை வேண்ட சொல்வது சம்பந்தமில்லாதவர்களும் தண்டிக்கப்படவேண்டும் என்பதற்கல்ல, சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கவேண்டும் என்பதற்காகத்தான். இரு தரப்பாரில் யாரோ ஒரு தரப்பினர் முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்ற நினைக்கிறார்கள், அது யார் ? என்று பொதுமக்கள் அறியார், அதையறியத்தான் இறைவன் வைக்கும் CHECK இந்த முபாஹலா. ஏனெனில் கொடூரமான விலங்குகளுக்கும் அல்லாஹ் அதன் குட்டிகளின்மீது பாசத்தை வைத்துள்ளான், தனது குட்டிகளுக்கு ஏதும் ஆபத்தென்றால் தனது உயிரையும் கொடுத்து தனது குட்டிகளை காப்பாற்றும், ஆறரிவு படைத்த மனிதனுக்கு மனைவி மக்களின் மீது கொடூரமான விலங்குகளை விட அதிகளவு பாசம் இருக்கும், இருக்கவேண்டும்.

கண்டிப்பாக இருவரில் ஒருவர் பொய் சொல்கிறார் என்பது உண்மை, அந்த பொய்யர் இதையும் மீறி தன் மனைவி மக்களுடன் வந்து தன்னையும் தன் குடும்பத்தையும் அல்லாஹ்வின் சாபத்தில் போடுவாரேயானால் நிச்சயமாக அவர் கொடூரமான விலங்கைவிட மோசமானவர், மேலும் பொய்சொல்பவரின் இறைநம்பிக்கையும் பலவீனமாகத்தான் இருக்கும், ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் : பொய், நெருப்பு விறகை தின்பதுபோல், அது இறைநம்பிக்கையை தின்றுவிடும். என்று கூறினார்கள்.

எனவே உண்மை சொன்னவருக்கு இந்த முபாஹலாவினால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் யார் அல்லாஹ்வின் சாப எச்சரிக்கையையும் மீறி பொய் சொல்லி தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அல்லாஹ்வின் சாபத்தை விரும்பி வேண்டிக்கொண்டாரோ அதற்கு சம்பந்தப்பட்டவர்தான் முழு பொருப்பு ஏற்கவேண்டும், அவர் தண்டிக்கப்பட வேண்டியவரே. ஏனெனில் அவர் விரும்பியபடி இறைவனின் சாபம் அவர் மீது வரும்பொழுதுது, சமுதாயம் அவரை அடையாளம் கண்டு அவரின் குழப்பத்திலிருந்து தப்பிக்க உதவும், மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் : குழப்பம் கொலையை விட பெரியது என கூறியுள்ளர்கள். நோயை உண்டு பன்னும் கிருமியை அழித்தால்தான் மனிதன் உயிரோடும் ஆரோக்கியத்தோடும் வாழ முடியும். எனவே இஸ்லாம் யாரையும் அநியாயமாக தண்டிப்பதில்லை, அவரவர்கள் தங்கள் கைகளாலேயே அழிவை தேடிக்கொள்கிறார்கள். இதற்கு யார் பொருப்பு ?

எனக்கு அல்லாஹ் புரியவைத்தபடி தங்களுக்கு விளக்கியுள்ளேன். அல்லாஹ்தான் எல்லாவற்றையும் நன்கு அறிந்தவன். வஸ்ஸலாம்.

இவன்.
முஹம்மது பதுருதீன்

Thursday 5 July 2007

ஹயாத்துஸ் ஸஹாபா

பயணத்தின்போது அமீர் நியமிப்பது :

உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறுகிறார்கள். மூன்று நபர்கள் பயணம் செய்தால் அவர்களில் ஒருவர் அமீராகி கொள்ளட்டும். இவ்வாறு அமீர் நியமனம் செய்து கொள்ளும்படி நபியவர்கள் ஏவியுள்ளார்கள்.

நூல் : பஜ்ஜார் ஹ.ச-70-2



கருத்து வேற்றுமை கொள்ளுவதை எச்சரித்து இப்னு மஸ்வூது ரலியல்லாஹூ அன்ஹூ செய்த குத்பா :

இப்னு மஸ்வூது ரலியல்லாஹூ அன்ஹூ கூறினார்கள் ஓ ஜனங்களே ! கட்டுப்பட்டு நடக்குமாறும் ஒன்றுபட்டு வாழும்படியும் உங்களை நான் ஏவுகிறேன். ஏனெனில் அது அல்லாஹ் ஏவிய ஒப்பந்தமாகும். மேலும் ஒன்று சேர்ந்து ஜமாத்தாக இருப்பதனால் ஏற்படும் உங்களுக்கு வெறுப்பான நிலை, பிரிந்து வாழ்வதில் உங்களுக்குள்ள பிரியமான நிலையை விட சிறந்ததாகும். அல்லாஹ் எல்லா பொருளுக்கும் ஒரு முடிவை வைத்தே படைத்துள்ளான். ஒரு நாள் அப்பொருள் அதன் எல்லையை அடைந்து முடிவடைந்து போகும், மேலும் இது இஸ்லாம் வளர்ச்சியடைந்து உறுதி பெறும் காலமாக உள்ளது, அதுவும் தன் எல்லையை சென்றடைய நெருங்கி விட்டது, பின்பு கியாமத் நாள் வரை இஸ்லாம் வளர்ந்து கொண்டும் குறைந்து கொண்டும் இருக்கும்.

அதன் அடையாளம் ஏழ்மை வருவதாகும், ஒரு ஏழை தனக்கு உதவி செய்யும் யாரையும் பெற்றுக் கொள்ள மாட்டான், ஒரு செல்வந்தன் தன்னிடமுள்ளவைகளைத் தனக்கு போதுமானதில்லை என்றே கருதுவான், இன்னும் அச்சமயம் ஒரு ஏழை தன் சகோதரனிடமும், சிறிய தந்தை மகனிடமும் தன் தேவைகளை முறையிடுவான். அவன் எப்பொருளையும் கொடுத்து உதவ மாட்டான். இன்னும் எந்தளவு ஏழ்மை என்றால் ஒரு ஏழை பெருந்திரளாக கூடியுள்ள இரு கூட்டத்தினர் மத்தியில் தன் தேவைகளைக் கேட்டவனாக நடந்து செல்வான். அவன் கையில் ஒரு பொருளும் வைக்கப்படாது (அதாவது யாரும் அவனுக்கு உதவி செய்திருக்க மாட்டார்கள்) இந்தளவு கடுமையான ஏழ்மை வரும்,

ஆக பூமி முழுவதும் ஏழ்மை, ஏழ்மை என்ற சப்தமாகவே இருக்கும், பூமியின் எல்லா பகுதியினரும் தங்கள் பகுதியில் ஏழ்மையை முறையிடுபவர்களாகவேக் காணப்படுவார்கள், பின்பு அல்லாஹ் நாடியபடி சில காலங்களுக்கு பின் பூமியில் (இந்த நிலை மாறி) அமைதி ஏற்படும் அதன் பின் பூமி பசுமை பெற்று செழிப்படைந்து தன் ஈரல் துண்டுகளை வெளிப்படுத்தும், அபூ அப்துர் ரஹ்மானே பூமி தன் ஈரல் துண்டுகளை வெளிப்படுத்துவது என்றால் என்ன ? என்று கேட்கப்பட்டதும், தங்கம் வெள்ளியின் தூண்கள் (வெளியேற்றப்படும்) என்று கூறினார்கள், அன்றைய நாளிலிருந்து கியாமத் வரை தங்கம் வெள்ளியால் எவ்வித பலனும் பெறப்படாது என்றும் கூறினார்கள்.

நூல் : தபரானீ