Monday 21 April 2008

بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ١

குவைத்திலிருந்து ஒரு நோட்டீஸ்!


கீழ்கண்ட தகவல் எமது ஈ மெயிலுக்கு அனுப்பப்பட்டது. இதன் மூலம் குழப்பவாதிகளை இனம் கண்டு அவர்களிடம் எச்சரிக்கையாய் இருந்து கொள்ள உதவிடும் சிறு முயற்சி. நேர் வழியை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக .ஆமீன்.





இவன்
முஹம்மது பதுருதீன்.

Tuesday 8 April 2008

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

தொழுகையின் சிறப்புகள்!

தொழுகையின் அவசியத்தைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் ஹதீஸ் புத்தகங்களில் ஏராளமாகக் கூறப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் திரட்டிவிடுவது இயலாத காரியம். எனவே, பரக்கத்திற்காக (நாற்பது) ஹதீஸ்களுடைய மொழி பெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாற்பது ஹதீஸ்கள் :


  1. திரு நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அருளினார்கள் : " உம்மத்தினர் மீது முதன் முதலாகத் தொழுகையைத்தான் அல்லாஹ் கடமையாக்கினான். கியாமத் நாளில் முதன்முதலாகத் தொழுகையைப் பற்றித்தான் விசாரிக்கப்படும்."


  2. தொழுகையின் விஷயத்தில் அல்லாஹ்வைப் பயப்படுங்கள். தொழுகையின் விஷயத்தில் அல்லாஹ்வைப் பயப்படுங்கள். தொழுகையின் விஷயத்தில் அல்லாஹ்வைப் பயப்படுங்கள்.


  3. மனிதனுக்கும், ஷிர்க்கிற்கும் (இணை வைத்தலுக்கும்) இடையில் தொழுகைதான் தடுப்பாக உள்ளது.


  4. இஸ்லாத்தின் அடையாளம் தொழுகையாகும். தூய்மையான மனதுடன் முஸ்தஹப்புகளைப் பேணி அந்தந்த நேரங்களில் தொழுது வருபவர் முஃமினாவார்.

  5. ஈமானையும் தொழுகையையும்விடச் சிறந்த ஒன்றை அல்லாஹ் கடமையாக்கவில்லை. அல்லாஹ் தொழுகையைவிடச் சிறந்த ஒன்றைக் கடமையாக்கியிருந்தால், அதைச் செய்யும்படி மலக்குகளுக்குக் கட்டலையிட்டிருப்பான். மலக்குகளோ இரவு பகலாகச் சிலர் ருகூவிலும், சிலர் ஸஜ்தாவிலும் இருக்கிறார்கள்.


  6. தொழுகை இஸ்லாத்தின் தூண்.


  7. தொழுகையினால் ஷைத்தானின் முகம் கறுத்து விடுகிறது.


  8. தொழுகை முஃமினுக்கு ஒளியாகும்.


  9. தொழுகை சிறந்த மார்க்கப் போராகும்.


  10. ஒருவர் தொழ ஆரம்பித்தவுடன் அல்லாஹ் அவரிடம் கவனத்தைச் செலுத்துகிறான். அவர் தொழுது முடித்தவுடன் அல்லாஹ் தனது கவனத்தைத் திருப்பிக் கொள்கிறான்.


  11. வானத்திலிருந்து ஒரு துன்பம் இறங்கினால் பள்ளி வாசலைச் செழிப்பாக்கி வைப்பவர்களை அது பாதிப்பதில்லை.


  12. ஏதேனும் ஒரு (பாவத்தின்) காரணத்தால் ஒருவர் நரகத்திற்குச் சென்றால், ஸஜ்தாவின் போது பூமியில் பட்ட உறுப்புகளை நரக நெருப்புத் தீண்டுவதில்லை.


  13. ஸஜ்தாவின் போது பூமியில் பட்ட உறுப்புகளை தீண்டக் கூடாதென்று நரக நெருப்புக்கு அல்லாஹ் தடை விதித்திருக்கிறான்.


  14. அந்தந்த நேரத்தில் நிறைவேற்றப்படும் தொழுகையே எல்லாவற்றையும் விட அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமான அமலாகும்.


  15. மனிதன் தன்னுடைய நெற்றியைப் பூமியில் வைத்து ஸஜ்தா செய்யும் நிலையே எல்லா நிலைகளையும் விட அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானதாகும்.


  16. ஸஜ்தாவிலிருக்கும் போது மனிதன் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாகி விடுகிறான்.


  17. தொழுகை சொர்க்கத்தின் சாவி ஆகும்..


  18. மனிதன் தொழுகைக்காக நின்று விட்டால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. அல்லாஹ்வுக்கும் அவனுக்கும் இடையில் திரைகள் விலகுகின்றன ; அவன் இருமல் போன்றவற்றில் ஈடுபடாத வரை.


  19. தொழுகையாளி அரசனான அல்லாஹ்வின் கதவைத் தட்டுகிறார். தட்டுபவர்களுக்குக் கதவு திறக்கப்படுவது இயல்பே.


  20. உடலுக்குத் தலை எவ்வளவு முக்கியமோ அந்த அளவு தீனில் தொழுகை முக்கியமானதாகும்.


  21. தொழுகை உள்ளத்தின் ஒளியாகும். தன் உள்ளத்திற்கு ஒளியூட்ட விரும்புபவர் (தொழுகையின் மூலம்) அதைச் செய்து கொள்ளட்டும்.


  22. ஒருவர் நல்ல முறையில் உளூச் செய்து, உள்ளச்சத்துடன் பர்லான அல்லது நபிலான தொழுகை இரண்டு அல்லது நான்கு ரக்அத்துகள் தொழுதுவிட்டுத் தன்னுடைய பாவங்களை மன்னிக்கும்படிக் கேட்டால், அல்லாஹ் மன்னித்து விடுகிறான்.


  23. பூமியின் எந்தப் பகுதியின் மீது தொழுகையின் மூலம், அல்லாஹ்வை நினைவுகூரப்படுகிறதோ, அது பூமியின் மற்ற பகுதிகளிடம் பெருமை பேசுகிறது.


  24. ஒருவர் இரண்டு ரக்ஆத் தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் தமது தேவையைக் கேட்டால் அல்லாஹ் அதை ஒப்புக்கொண்டு உடனே கொடுக்கிறான். அல்லது ஏதாவது நன்மையைக் கருதிச் சிறிது பிற்படுத்தித் தருகிறான். ஆயினும், உறுதியாக துஆ ஏற்றுக்கொள்ளப்படும்.


  25. அல்லாஹ்வையும் அவனது மலக்குகளையும் தவிர வேறு வேறு யாருக்கும் தெரியாமல் ஒருவர் இரண்டு ரக்அத் தொழுதால், அவருக்கு நரகத்திலிருந்து விடுதலை அளிக்கும் சீட்டுக் கிடைத்து விடுகிறது.


  26. பர்ளான ஒரு தொழுகைக்குப் பிறகு ஒரு துஆ ஒப்புக் கொள்ளப்படுகிறது.


  27. நல்ல முறையில் உளூச் செய்து, ருகூவையும் சுஜூதையும் பேணுதலாகச் செய்தவாறு ஐந்து நேரத் தொழுகைகளை நிறைவேற்றி வருபவருக்குச் சொர்க்கம் கிடைப்பது உறுதியாகும், அவருக்கு நரகம் ஹராமாகிவிடும்.


  28. ஒரு முஸ்லிம் ஐந்து நேரங்களும் பேணுதலாகத் தொழுது கொண்டிருக்கும் வரையில் ஷைத்தான் அவருக்குப் பயப்படுகிறான். அவர் தொழுகையில் அசட்டை செய்ய ஆரம்பித்தால் ஷைத்தானுக்குத் துணிச்சல் உண்டாகி, அவரைக் கெடுக்க நினைக்கிறான்.


  29. நேரம் வந்த உடனேயே தொழுது கொள்வது எல்லாவற்றினும் மிகச் சிறந்த அமலாகும்.

  30. தொழுகை பயபக்தியாளர்களின் தியாகமாகும்.


  31. ஆரம்ப நேரத்தில் தொழுது கொள்வது அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமான அமலாகும்.


  32. காலையில் எழுந்ததும் தொழுகைக்காகச் செல்பவர், ஈமானின் கொடியைப் பிடித்துக் கொண்டு செல்கிறார். கடைவீதிக்குச் செல்பவர் ஷைத்தானின் கொடியைப் பிடித்துக் கொண்டு செல்கிறார்.


  33. லுஹருடைய பர்ளுக்கு முன்பு, நான்கு ரக்அத்துகள் (சுன்னத்) தொழுதால் நான்கு ரக்அத்துகள் தஹஜ்ஜூத் தொழுத நன்மை கிடைக்கிறது.


  34. லுஹருக்கு முன்புள்ள (சுன்னத்) நான்கு ரக்அத்துகளும் தஹஜ்ஜூத்துடைய நான்கு ரக்அத்துகளுக்குச் சமமாகும்.


  35. மனிதன் தொழ நின்றுவிட்டால் அல்லாஹ்வின் அருள்மாரி (ரஹ்மத்) அவன் மீது பொழிகிறது.


  36. நடு இரவுத் (தஹஜ்ஜூத்) தொழுகையே மிகச் சிறந்த தொழுகையாகும். ஆனால், மிகக் குறைவானவர்களே அதைத் தொழுகிறார்கள்.


  37. ஹஜ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வந்து " முஹம்மத் ! (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) நீங்கள் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் ஒருநாள் மரணமடைய வேண்டும். நீங்கள் யாரைப் பிரியப்பட்டாலும், ஒரு நாள் அவர்களை விட்டுப் பிரிய வேண்டும். நிச்சயமாக உங்கள் செயல்களுக்குரிய பிரதிபலனை நீங்கள் பெறுவீர்கள். ஒரு முஃமினின் சிறப்பு தஹஜ்ஜூத் தொழுவதில்தான் இருக்கிறது. முஃமினின் கண்ணியம் பிறரிடம் தேவைப்படாமல் வாழ்வதில் இருக்கிறது. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை" என்று கூறிச் சென்றார்கள்.


  38. " கடைசி இரவில் இரண்டு ரக்அத் (தஹஜ்ஜூத்) தொழுவது முழு உலகத்திலிருக்கும் செல்வத்தைவிடச் சிறந்ததாகும். எனது உம்மத்தினருக்குச் சிரமம் ஏற்படும் என்றில்லாவிட்டால், தஹஜ்ஜூத் தொழுகையை நான் கடமையாக்கி இருப்பேன் ".


  39. தஹஜ்ஜூத் தொழுகையைக் கடைப்பிடுத்து வாருங்கள். அது ஸாலிஹீன்களின் (நல்லவர்களின்) வழியாகும். அல்லாஹ்வை நெருங்கச் செய்யும் சாதனமாகும். தஹஜ்ஜூத் தொழுகை பாவங்களைத் தடுக்கிறது ; பாவங்கள் மன்னிக்கப்படக் காரணமாக ஆகிறது. அத்துடன் உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.


  40. அல்லாஹ் கூறுகிறான் ; " ஆதமுடைய மகனே ! பகலின் ஆரம்பத்தில் நான்கு ரக்அத் தொழுவதில் அசட்டையாக இருக்காதே. ஏனென்றால் (அதன் காரணமாக) அன்றைய நாள் முழுவதும் உன்னுடைய வேலைகளை நான் கவனித்துக் கொள்கிறேன் ".


ஹதீஸ் நூல்களில் தொழுகையின் சிறப்புகளைப் பற்றி ஏராளமாகக் கூறப்பட்டுள்ளன, நாற்பது என்ற எண்ணிக்கைக்காக இவை எழுதப்பட்டன. ஏனெனில், ஒருவர் இவற்றை மனப்பாடம் செய்தால் நாற்பது ஹதீஸ்களை மனனம் செய்த சிறப்பைப் பெற்றுக்கொள்வார்.

தொழுகை உண்மையிலேயே மிகப் பெரும் செல்வமாகும். அல்லாஹ் யாருக்கு அதன் இன்பத்தை அனுபவிக்கச் செய்தானோ, அவர்தாம் அதன் மதிப்பைப் புரிந்து கொள்ள முடியும். இத்தகைய செல்வத்தின் மதிப்பை விளங்கியே வள்ளல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் " தொழுகை என் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கிறது ", என்று கூறினார்கள். மேலும் இந்த இன்பத்தில் மூழ்கியே இரவின் பெரும் பகுதியைத் தொழுகையில் கழித்தார்கள். தங்களின் உயிர் பிரியும் நேரத்திலும்கூடத் தொழுகையைப் பற்றியே வலியுறுத்திக் கூறினார்கள்.

(தொகுப்பு நூல் :" அமல்களின் சிறப்புகள்" தலைப்பு : "தொழுகையின் சிறப்புகள்")

இவ்வளவு சிறப்பும் பரக்கத்தும் நிறைந்த தொழுகை இக்காலத்தில் அலட்சியத்தினாலும் உலக காரியங்களில் மூழ்கிவிடுவதாலும் பாழாக்கப்படுகிறது. இது குறித்து யாரையும் ஏசவோ அல்லது குறைகூறவோ உள்ள விஷயமல்ல. மாறாக இத்தொழுகையின் பக்கம் மக்களை அழைப்பது ஒவ்வொரு தொழுகையாளியின் மீதும் கடமையாகும். நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினர்களுக்கும் மற்ற நபிமார்களின் (அலை) உம்மத்தினர்களுக்கும் உள்ள வேறுபாடு, தானும் நல்லமல்கள் புரிந்து மற்ற மக்களையும் நன்மையின் பக்கம் அழைப்பதுதான். அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினரின் சிறப்பைக் குறிப்பிடும்பொழுது :

(விசுவாசிகளே !) நன்மையான காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை விசுவாசிக்கின்ற நீங்கள்தாம் மனிதர்களில் தோன்றிய சமுதாயத்தார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள்.

(அல்குர்ஆன்: 4 : 3 : 110)


ஒருவர் தொழாமல் இருப்பதே பெரும்பாவமாகும். மேலும் இத்தொழுகையின் பக்கம் மக்களை அழைப்பதும் மிகப் பெரிய நன்மையுமாகும்.
உலக முஸ்லிம்களின் மக்கள் தொகையில் தொழுகையாளிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டால் மிகவும் சொற்ப சதவிகிதமே, இதில் இக்லாஸோடும் உள்ளச்சத்தோடும் தொழும் தொழுகையாளிகளை கணக்கிட்டால் நிலைமை இன்னும் மோசம். இது மிகவும் கவலைக்குறிய விஷயமாகும். இன்று முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் ஆபத்து என்றும் முஸ்லிம்கள் தாக்கப்படுகிறார்கள் என்றும் கோஷங்கள் எழுப்பப்படுகின்றது. அதற்காக ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்தப்படுகின்றது. ஆனால் உண்மை நிலையோ இத்தகைய நிலைமைக்கு இறைவணக்க வழிபாடுகளில் குறையுடைய முஸ்லிம்களாகிய நாமே காரணமாக இருக்கிறோம் என்பதை அறியாமல் இருப்பதுதான்.

இந்நிலைக்கு என்ன காரணம் என்பதை அல்லாஹ் சுபுஹானஹூத்தஆலா அருள்மறையில் குறிப்பிடும்பொழுது :

"உனக்கு யாதொரு நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்வினால் ஏற்பட்டது" என்றும், " உனக்கு யாதொரு தீங்கேற்பட்டால், அது (நீ இழைத்த குற்றத்தின் காரணமாக,) உன்னால்தான் வந்தது" என்றும், (கூறுவீராக ! நபியே !)

(அல்குர்ஆன் : 5 : 4 : 79)


மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாகக் கடலிலும், தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவிவிட்டன. அதிலிருந்து அவர்கள் விலகிக்கொள்ளும்பொருட்டு, அவர்களின் தீவினைகளில் சிலவற்றின் தண்டனையை அவர்கள் (இம்மையிலும்) சுகிக்கும்படி அவன் செய்ய வேன்டியதாகிறது.

(அல்குர்ஆன் : 21 : 30 : 41)


ஒருவர் தொழாமல் இருப்பதே மிகப்பெரிய கேடுதான். அல்லாஹ்வின் கட்டளைகளை புறக்கனித்துவிட்டு அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்க்கும் போக்கு இக்காலகட்டத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. நோய்க்கு மருந்து கொடுக்கும் முன் நோயின் மூல காரணத்தை கண்டரிவதுதான் ஒரு நல்ல மருத்துவரின் அடையாளமாகும். அதுபோல் ஒரு நல்ல முஸ்லிமிற்கு அடையாளம் தனது கஷ்டத்திற்கு எந்த அல்லாஹ்வின் கட்டளையும் நபியின் சுன்னத்தும் விடுபட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதனை தனது வாழ்வில் அமலில் கொண்டுவருவதுதான்.

நமக்கு ஏற்படும் கஷடங்களுக்கு, நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும், எவ்வாறு அல்லாஹ்விடம் உதவி தேடவேண்டும் என்பதை அல்லாஹ்வும் அவனுடைய ரசூலும் காட்டி தந்த வழிமுறையை பார்ப்போம்.

(எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு, தொழுது (இறைவனிடத்தில்) உதவிதேடுங்கள். ஆனால் நிச்சயமாக இது, உள்ளச்சமுடையோர்களுக்கே அன்றி, (மற்றோருக்கு) மிகப் பளுவாகவே இருக்கும்.

(அல்குர்ஆன் 1 : 2 : 45)


ஹஜ்ரத் ஹூதைஃபா ரலியல்லாஹூ அன்ஹூ அறிவிக்கின்றார்கள் : " நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏதாவது சிரமம் ஏற்பட்டால், உடனே தொழுகையின் பக்கம் விரைவார்கள்."

(நூல் : துர்ருல் மன்ஃதூர்)


இதற்கு மாற்றமாக மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில் நடமாடும் போலிகள் தாங்கள்தான் அல்லாஹ்வையும் ரசூலையும் பின்பற்றுபவர்கள் எனக் கூறிக்கொண்டு, அல்லாஹ்வை மறந்து ஆர்ப்பாட்டம் போராட்டம் என்ற பெயரில் அரசாங்கங்களிடம் உதவி தேடுகிறார்கள். தாங்கள் மட்டுமின்றி மற்றவர்களையும் தங்களுக்கு கூட்டம் சேர வேண்டும் என்பதற்காக அழைக்கின்றனர். இதனை அறியாத சிலரும் ஆன் பெண் வித்தியாசமின்றி கலந்து கொள்கின்றனர். இதில் தாங்கள்தான் ஏகத்துவவாதிகள் என்று அடிக்கடி வாந்தி வேறு.

அல்லாஹ் எந்த தொழுகையை அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு காணும் சாதனமாக ஆக்கித் தந்தானோ, எந்தத் தொழுகை நபியின் கண்களுக்கு குளிர்ச்சி தந்ததோ, மறுமையில் எந்த விஷயத்தைப்பற்றி முதலாவதாக கேள்வி கேட்கப்படுமோ அந்த தொழுகை நம்முடைய வாழ்க்கையில் எந்த நிலைமையில் உள்ளது என்பதை சற்றே சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். நம்முடைய இம்மை மறுமையின் வெற்றி அல்லாஹ்வின் கட்டளைகளையும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையையும் பின்பற்றுவதில்தான் இருக்கிறது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உறுதியாக ஈமான் கொள்ளவேண்டும். ஈமான் கொள்வது என்பது நமது வாழ்க்கையில் அமலில் கொண்டுவருவதில்தான் உள்ளது.

இப்படிப்பட்ட பாக்கியம் நிறைந்த மேலான தொழுகையை பேணி பாதுகாத்து நாமும் நமது சந்ததிகளும் தொழ அல்லாஹ்விடமே உதவி தேடுவோம்.

" என் இறைவனே ! என்னையும், என் சந்ததிகளையும் (உன்னைத்) தொழுது வருபவர்களாக ஆக்கிவை. எங்கள் இறைவனே ! என்னுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வாயாக !"

(அல்குர்ஆன் 13 : 14 : 40)


இவன்.
முஹம்மது பதுருதீன்.