Wednesday 23 January 2008



بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

உமைர் பின் சஃது அல் அன்சாரி (ரலி) அவர்களின் சம்பவம்.

அப்துல் மலிக் பின் ஹாருன் (ரஹ்) அறிவிப்பதாவது. உமர் (ரலி) அவர்கள் உமைர் பின் சஃது அல் அன்சாரி (ரலி) அவர்களை ஹிம்ஸின் கவர்னராக்கி அனுப்பியிருந்தார்கள். ஒரு வருடம் அங்கு தங்கியிருந்தார்கள். அவரை பற்றிய எந்த செய்தியும் வந்து சேரவில்லை. எனவே உமர் (ரலி) தன் எழுத்தாளருக்கு கூறினார்கள். நிச்சயமாக அவர் நமக்கு மோசடி செய்து விட்டார் என்றே நினைக்கிறேன். என்னுடைய இந்த தபால் உங்களுக்கு கிடைத்து அதை படித்து பார்த்ததும், புறப்பட்டு வரவும். வரும்போது முஸ்லிம்களின் பொதுச்சொத்திலிருந்து என்னென்னெ ஒன்று சேர்த்துள்ளீரோ அதையும் கொண்டு வரவும் என்று உமைருக்கு தபால் எழுதச் சொன்னார்கள்.

தபால் பார்த்த உமைர் (ரலி) அவர்கள், தன் தோல்துறுத்தியை எடுத்து, அதில் உணவையும், தன்னுடைய தட்டையும் வைத்துக் கொண்டார்கள். தன் ஒரு கூஜாவை தொங்கவிட்டுக் கொண்டார்கள். இன்னும் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு, ஹிம்ஸிலிருந்து மதீனாவரை நடந்தே வந்து சேர்ந்தார்கள். நிறமெல்லாம் மாறி, முகம் தூசிபடிந்து (பல நாட்கள் வெட்டாமல்) முடி நீண்டு இருந்த நிலையில் மதீனா வந்து சேர்ந்தார்கள். உமர் (ரலி) அவர்களிடம் வந்ததும் அமீருல் முஃமினீனே ! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் உங்கள் நிலை என்னவென்று கேட்டார்கள். அதற்கு உமைர் (ரலி) என் நிலையை தான் தாங்கள் பார்க்கிறீர்களே, ஆரோக்கியமான உடல், சுத்தமான இரத்தம் உள்ளவனாக என்னை தாங்கள் காண்கிறீர்கள் அல்லவா ? என்னுடன் துன்யா உள்ளது. அதன் ஓரத்தை பிடித்து அதை இழுத்து வந்துள்ளேன் என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் அதிக பொருட்கள் கொண்டு வந்திருப்பார் என்றெண்ணி, உங்களுடன் என்ன ? உள்ளது என்று கேட்டார்கள். என்னுடன் என் தோல் துறுத்தியுள்ளது, அதில் என் தட்டும், உணவும் வைத்திருக்கிறேன். அதிலேயே சாப்பிடுவேன். அதிலேயே குளிப்பேன், துவைப்பேன். என் கூஜாவில் ஒளுவுடைய தண்ணீர் மற்றும் குடிநீர் வைத்திருப்பேன். என்னுடைய அஸாவில் சாய்ந்து கொள்வேன். தேவைப்பட்டால் விரோதியை எதிர்த்து போராடுவேன். அல்லாஹ் மீது சத்தியமாக, என் உலகம் இந்த சாமான்கள் தவிர வேறில்லை என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் நடந்தே வந்தீர்களா ? என்று கேட்டார்கள். அவர்கள் ஆம் என்றதும், ஒருவரும் உங்களுக்கு பயணம் செய்யும் வாகனம் ஏற்பாடு செய்து தரவில்லையா ? என்று கேட்டார்கள். அவர்கள் யாரும் அதை செய்யவில்லை, நானும் அவர்களிடம் கேட்கவில்லை என்று சொன்னார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் நீங்கள் யாரிடமிருந்து வந்தீர்களோ அவர்கள் மிக கெட்ட முஸ்லிம்கள் என்று கூறினார்கள். உமைர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் உமரே ! புறம் பேசுவதை விட்டும் அல்லாஹ் உங்களை தடுத்துள்ளான். அவர்கள் (அம்மக்கள்) சுபுஹுடைய தொழுகை தொழுவதை நான் பார்த்துள்ளேன். (அதாவது நல்லோர்களே சுபுஹு தொழுகையை நிறைவேற்றுவார்கள். எனவே நீங்கள் கூறுவது போன்று அவர்கள் கெட்டவர்கள் அல்ல என்று கூறினார்கள்.)

ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் உங்களை எங்கே அனுப்பினேன், தப்ரானியுடைய அறிவிப்பில் வந்துள்ளது, நான் உங்களை எதற்கு அனுப்பினேன். என்ன செய்துவிட்டு வந்துள்ளீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், உங்கள் கேள்வியின் அர்த்தமென்ன ? அமீருல் முஃமினீனே ! என்று கேட்டார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் சுப்ஹானல்லாஹ் (இது கூட புரியவில்லையா) என்று கேட்டார்கள். எனவே உமைர் (ரலி) அவர்கள் நான் உங்களை கவலையாக்கிடுவேன் என்று பயப்பட வில்லையானால், உங்களுக்கு இச்செய்தியை சொல்லமாட்டேன்.

நீங்கள் என்னை அனுப்பியதும், அந்த நாட்டிற்கு சென்றேன். அந்நாட்டின் நல்லோர்களை ஒன்று கூட்டி மக்களுடைய கணீமத் பொருட்களை ஒன்று சேர்த்து வர அவர்களுக்கு பொறுப்பு கொடுத்தேன். அவர்கள் அதை ஒன்று சேர்த்ததும் அதற்கு தகுதியான (மக்களிடம்) அதை கொடுத்து விட்டேன். அதற்கு நீங்கள் உரிமையுடையவராக இருந்தால் கொண்டு வந்திருப்பேன் என்று கூறினார்கள்.

நம்மிடம் நீங்கள் எதனையும் கொண்டு வரவில்லையா ? என்று கேட்டார்கள். இல்லை என்றதும் உமைருக்காக மீண்டும் புதிதாக பதவி ஒப்பந்தத்தை கொடுங்கள் என்று கூறினார்கள். அப்போது உமைர் (ரலி) அவர்கள் அது இவ்வளவு நாள் இருந்தது. இனி உங்கள் சார்பாகவோ, உங்களுக்கு பின் வேறொருவரின் சார்பாகவோ பதவி பொருப்பேற்க மாட்டேன் என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக ! அப்பதவியிலிருப்பதால் (தவறைவிட்டு) பாதுகாப்பு பெறவில்லை, இனியும் பாதுகாப்பு பெற முடியாது. ஏனெனில் நான் ஒரு நஸ்ரானியை பார்த்து அல்லாஹ் உன்னை இழிவுபடுத்துவானாக என்று ஒரு சமயம் சொல்லி விட்டேன். உமரே ! நீங்கள் தான் எனக்கு இந்நிலையை ஏற்படுத்தி விட்டீர்கள். உமரே என் வாழ்நாளில் மோசமான நாள் உங்களுடனே கலீஃபா ஆன நாள்தான் என்று கூறி, வீட்டுக்கு செல்ல அனுமதி கேட்டார்கள். அனுமதியளித்ததும் தன் வீடு திரும்பினார்கள். அது மதீனாவிலிருந்து சில மைல்கள் தூரத்திலிருந்தது.

உமைர் (ரலி) அவர்கள் திரும்பி சென்றதும், அவர் நமக்கு மோசடி செய்து விட்டார் என்றே கருதுகிறேன் என்பதாக உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். பின்னர் ஹாரிஸ் என்பவரிடம் 100 தீனார்களை கொடுத்தனுப்பி, உமைரிடம் சென்று விருந்தாளி போன்று தங்கி இருப்பாயாக. அங்கு சந்தேகத்திற்குரிய ஏதேனும் அடையாளத்தைக் கண்டால், அப்படியே வந்து விடுவாயாக மேலும் கடுமையான வறுமை நிலையை கண்டால், இந்த 100 தீனாரை அவருக்கு கொடுத்து விடுவாயாக என்று கூறினார்கள். எனவே ஹாரிஸ் அங்கு சென்ற போது உமைர் (ரலி) அவர்கள் ஒரு சுவரோரம் உட்கார்ந்து தன் சட்டையில் உள்ள பேன்களை அகற்றிக் கொண்டிருந்தார்கள்.

அந்த மனிதர் அவர்களுக்கு சலாம் சொல்லியதும், உமைர் (ரலி) அவர்கள் அந்த மனிதரைப் பார்த்து அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக ! உள்ளே வருவீராக என்று கூறினார்கள். அவர் உள்ளே வந்ததும் எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டார்கள். மதீனாவிலிருந்து என்று கூறியதும், அமீருல் முஃமினீனை எவ்வாறு விட்டு வந்தாய் என்று கேட்டார்கள். அதற்கு அவர் நல்ல நிலையில் விட்டு வந்தேன் என்று சொன்னார்கள். முஸ்லிம்களை எந்த நிலையில் விட்டு வந்தாய் என்று கேட்டார்கள். அதற்கும் அவர்களை நல்ல நிலையில் விட்டு வந்தேன் என்று கூறினார்.

மேலும் உமர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய தண்டனைகளை நிலை நாட்டுகிறாரா என்று கேட்டார்கள். அதற்கு அவர் “ஆம்” ஒரு கெட்ட செயல் செய்த தன் மகனைக் கூட சாட்டையால் அடித்தார்கள். அதனால் அவர் இறந்து விட்டார் என்று பதில் கூறினார். உடனே உமைர் (ரலி) அவர்கள் யா அல்லாஹ் ! உமருக்கு உதவி செய்வாயாக ! அவர் உன்னை நேசிப்பதுதான் இவ்வாறு கடுமையாக நடந்து கொள்ளச் செய்கிறது என நான் நினைக்கிறேன். என்று கூறினார்கள்.

பின்பு அந்த மனிதர் மூன்று நாட்கள் அவர்களுடனே தங்கி இருந்தார். கோதுமை ரொட்டியை தவிர வேரொன்றும் அவர்களிடம் சாப்பிடுவதற்கில்லை. அதை விருந்தாளியான இவருக்கு சாப்பிட கொடுத்துவிட்டு, வீட்டில் உள்ள அனைவரும் பசித்திருந்தார்கள். கடைசியாக (இருந்த உணவும் தீர்ந்து) அவர்களுக்கு கஷ்டம் வந்ததும், உமைர் (ரலி) அவர்கள் அந்த மனிதரைப் பார்த்து நீர் நம்மை விட்டு திரும்பி விட நாடினால் சென்று விடலாம் என்று கூறினார்கள்.

உடனே அவர் 100 தீனாரை எடுத்து அவரிடம் கொடுத்து அமீருல் முஃமினீன் உங்களுக்கு கொடுத்து அனுப்பியுள்ளார்கள். உங்கள் தேவைகளுக்கு இவைகளை உதவியாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதும், அவர்கள் ஒர் சப்தமிட்டு எனக்கு இது தேவையில்லை இதை திரும்ப கொண்டு செல்வாயாக என்று கூறினார்கள்.உடனே அவர்களுடைய மனைவி அவர்களைப் பார்த்து உங்களுக்கு அது தேவைப்பட்டால் அதை வைத்துக் கொள்ளுங்கள். இல்லையானால் அவைகளை சதக்கா செய்திடலாமே என்று கூறினார்கள்.

உடனே உமைர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்த தீனார்களை வைத்துக்கொள்ள என்னிடம் ஒன்றுமில்லை என்றார்கள். உடனே அன்னாரின் மனைவி தன் மேலாடையின் கீழ்பகுதியை கிழித்து அந்த கிழித்த துணியை அன்னாரிடம் கொடுத்து, அதில் அதை வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். பின்பு உமைர் (ரலி) அவர்கள் அதை எடுத்துக் கொண்டு வெளியே சென்று ஷஹீதானவர்களின் குழந்தைகளுக்கும், ஏழைகளுக்கும் பிரித்துக் கொடுத்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார்கள்.

அந்த தூதுவர் தனக்கும் அதிலிருந்து ஏதேனும் கொடுப்பார்கள் என எண்ணினார். உமைர் (ரலி) அவர்கள், அவரிடம் அமீருல் முஃமினுக்கு என் சலாம் சொல்லுங்கள் என்று கூறி அனுப்பி விட்டார்கள்.

ஹாரிஸ் என்ற அந்த மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் திரும்பச் சென்றார். அப்பொழுது என்ன பார்த்துவிட்டு வந்தாய் என்று கேட்டார்கள். அதற்கு அவர் அமீருல் முஃமினீனே ! கடுமையான கஷ்ட நிலையைக் கண்டேன் என்று கூறினார்கள். அந்த தீனார்களை என்ன செய்தார் என்று கேட்டார்கள். அது எனக்குத் தெரியாது என்று பதில் கூறினார்கள்.

உடனே உமர் (ரலி) அவர்கள் ஒரு கடிதம் எழுதி இந்த கடிதம் உங்களுக்கு கிடைத்ததும் உங்கள் கையில் இருந்து அதை கீழே வைக்காமல் நேரடியாக இங்கு வரவும். என்று எழுதி அனுப்பினார்கள். உடனே அவரும் புறப்பட்டு உமர் (ரலி) அவர்களிடம் வந்ததும், அந்த தீனார்களை என்ன செய்தீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தேன். அதை பற்றி நீங்கள் ஏன் கேட்கிறீர்கள் என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் உங்களிடம் சத்தியமிட்டுக் கேட்கிறேன். அவைகளை என்ன செய்தீர்கள் என்று நிச்சயம் எனக்கு சொல்ல வேண்டும் என்று கூறினார்கள். அவைகளை நான் என் மறுமை வாழ்வுக்காக வேண்டி முற்படுத்தி விட்டேன் என்று கூறினார்கள்.

உடனே உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக என்று கூறி 60 படி உணவு தானியமும், இரண்டு ஆடைகளும் அவருக்கு கொடுக்குமாறு ஏவினார்கள். அப்பொழுது அவர்கள் இந்த உணவு தானியம் எனக்கு தேவைப்படாது. ஏனெனில் நான் என் வீட்டில் இரண்டு படி கோதுமை வைத்துள்ளேன். அதை சாப்பிட்டு முடிப்பதற்குள் அல்லாஹூத்தஆலா அடுத்த உணவை கொண்டு சேர்த்து விடுவான் என்று கூறி அந்த உணவு தானியங்களை வாங்கவில்லை. மேலும் இவ்விரு ஆடைகளும் இன்னாருடைய தாய் (என்னுடைய மனைவி) ஆடையில்லாமல் இருக்கிறாள். என்று கூறி அவ்விரண்டையும் வாங்கிக் கொண்டார்கள். பின்பு தன் வீட்டிற்கு திரும்பி சென்றார்கள். அங்கு சென்ற சிறிது நேரத்தில் அன்னார் இறந்து விட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ரஹ்மத் செய்வானாக. இச்செய்தி உமர் (ரலி) அவர்களுக்கு கிடைத்ததும் அவர் மீது இரக்கப்பட்டு மேலும் வருத்தப்பட்டு பகீயே கர்கத் என்ற கபர்ஸ்தானுக்கு சென்றார்கள். அப்பொழுது தன் தோழர்களிடம் உங்களில் ஒவ்வொருவரும் தங்களுடைய ஆசைகளை சொல்லுங்கள் என்று கூறினார்கள்.

அப்பொழுது ஒரு மனிதர் அமீருல் முஃமினீனே ! என்னிடம் அதிகமான செல்வம் இருக்க வேண்டும் அதைக் கொண்டு பல அடிமைகளை வாங்கி அல்லாஹ்விற்காக உரிமை விட வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்று கூறினார். மற்றொரு மனிதர் அமீருல் முஃமினீனே ! என்னிடம் அதிகமான செல்வம் இருக்க வேண்டும் அவை அனைத்தையும் நான் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று சொன்னார். மற்றொரு மனிதர் எனக்கு அதிக சக்தி இருக்க வேண்டும் அதைக் கொண்டு ஜம்ஜம் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து பைத்துல்லாஹ்வை ஹஜ் செய்யும் ஹாஜிகளுக்கு நீர் புகட்ட ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.

பின்பு உமர் (ரலி) அவர்கள், எனக்கு உமைர் பின் சயீதை போன்று ஒரு மனிதர் கிடைக்க வேண்டும் அவரைக் கொண்டு முஸ்லிம்களுடைய பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உதவி பெற்றுக்கொள்ள ஆசைப்படுவதாக கூறினார்கள்.

நூல் : ஹில்யா, ஹ.ச-185-2.


இது தான் நமது உத்தம சத்திய ஸஹாபாக்களின் வாழ்க்கை முறையாகும். இவ்வுத்தமர்கள் மார்க்கத்தை விளங்கிய பிரகாரம் நாமும் விளங்கி அமல் செய்ய அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லுதவி புரிவானாக. ஆமின். வாகிர தஃவானா வஅனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாம்.

இவன்.

முஹம்மது பதுருதீன்.