Sunday 24 August 2008

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

ஹயாத்துஸ் ஸஹாபா

கிலாபத் பொருப்பேற்கும் முன்பும் அதற்கு பின்புமுள்ள அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் வாழ்க்கை.

இப்னு உமர், ஆயிஷா, இப்னுல் முஸய்யிப் (ரலி) மற்றும் இவர்கள் போன்றோர் அறிவிப்பதாவது. அபூபக்கர் (ரலி) அவர்களிடம் ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வபாத்தான நாளில் பைஅத் செய்யப்பட்டது. ஹிஜ்ரி 11-ஆம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதம் 12-ம் நாள் திங்கட்கிழமையன்று ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மரணமானார்கள்.

மேலும் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் ஹரிஸ் பின் கஜ்ரஜ் குடும்பத்தைச் சேர்ந்த ஜைத் பின் அபூஜூஹைர் என்பவரின் மகனான, காரிஜா என்பவரின் மகளான, ஹபீபா என்ற பெயர் பெற்ற, சுனுஹ் என்ற இடத்திலுள்ள தன் மனைவியுடைய வீட்டில் தங்குபவர்களாக இருந்தார்கள். அது மதீனாவுக்கு வெளியே இருந்தது. இன்னும் அன்னார் சுனுஹ் என்ற இடத்தில் ஆட்டு ரோமத்தினால் ஆன ஒரு குடிசை போட்டிருந்தார்கள். மதினா விலேயே தங்க வேண்டும் என்று முடிவு செய்யும் வரை அவ்வீட்டிலேயே தங்கினார்கள். அதிகாலையில் கால்நடையாக நடந்தே மதினாவுக்கு வருவார்கள். சில வேலை தன்னுடைய குதிரையின் மீது ஏறி வருவார்கள். அந்நேரத்தில் அவர்கள் கைலி அணிந்திருப்பார்கள். செம்மண் நிற சாயமிடப்பட்ட போர்வையை போர்த்தியிருப்பார்கள்.

அன்னார் மதீனாவுக்கு வந்து மக்களுக்கு ஐந்து நேரம் தொழ வைப்பார்கள். இஷா தொழுது விட்டால் சுனுஹிலுள்ள தன் மனைவியிடம் சென்று விடுவார்கள். அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் மதீனா வந்தால் மக்களுக்கு தொழ வைப்பார்கள். வரவில்லையென்றால் உமர் (ரலி) அவர்கள் தொழவைப்பார்கள். மேலும் அபூபக்கர் (ரலி) அவர்கள் ஜூம்ஆவுடைய நாளில் பகலின் ஆரம்பத்தில் சுனுஹில்தான் இருப்பார்கள். தன்னுடைய தலைக்கும், தாடிக்கும் மருதாணி போடுவார்கள். பின்பு ஜூம்ஆவுடைய நேரத்தில் மதீனாவிற்கு வந்து ஜூம்ஆ தொழவைப்பார்கள்.

மேலும் அன்னார் வியாபாரியாக இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் காலையில் கடைவீதிக்குச் சென்று விற்பது, வாங்குவதில் ஈடு படுவார்கள். இன்னும் அவர்களிடம் ஒரு ஆட்டு மந்தை இருந்தது. அவை மாலை நேரத்தில் தன் கொட்டகைக்குத் திரும்பும் சில வேளை அவர்களே அந்த ஆடுகளை மேய்க்கச் செல்வார்கள். சில வேளை வேறொருவர் மேய்க்கச் செல்வார். இன்னும் அபூபக்கர் (ரலி) அவர்கள் தன் பகுதி மக்களின் கால்நடைகள், ஆடுகளுக்குப் பால் கறந்து கொண்டும் இருந்தார்கள்.

எப்போது அன்னாரிடம் கிலாஃபத்துடைய பைஅத் செய்யப்பட்டதோ அப்போது அப்பகுதியிலிருந்த ஒரு சிறுமி இனி நம் வீட்டிலுள்ள கால்நடைகள், ஆடுகளுக்கு பால் கறக்க மாட்டார்கள் என்று கூறினாள். இதை கேள்விப்பட்ட அபூபக்கர் (ரலி) அவர்கள், என் வயதின் மீது சத்தியமாக ! உங்களுக்காக அந்த ஆடுகளில் நிச்சயம் நான் பால் கறந்து தருவேன். மேலும் நான் ஏற்றுக் கொண்ட கிலாபத் பொருப்பு ஏற்கனவே என்னிடமிருந்து நற்பழக்கங்களை மாற்றி விடாது என்று ஆதரவு வைக்கிறேன் என்பதாகக் கூறினார்கள்.

சில வேலை, தன் முஹல்லாவிலுள்ள சிறுமியிடம், பால் கறக்கும் போது சிறுமியே ! நன்கு நுரைவருமளவு கறப்பதா ? அல்லது நுரையின்றி கறந்து தரவா ? என்று கேட்பார்கள். அச்சிறுமி சில சமயம், நுரையுடன் கறக்கச் சொல்லும், சில சமயம் நுரையின்றி கறக்கச் சொல்லும், எவ்வாறு கூறினாளோ, அது போன்று கறந்து கொடுப்பார்கள். இவ்வாறே ஆறுமாத காலம் சுனுஹில் தங்கியிருந்தார்கள். பிறகு மதீனா வந்து (அங்கேயே) தங்கி தன் கிலாஃபத் பொருப்பை கவனித்தார்கள்.

இன்னும் அல்லாஹ் மீது சத்தியமாக ! வியாபாரத்தில் ஈடு பட்டுக்கொண்டே மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதென்பது சரிபட்டு வராது. மாறாக வியாபாரம் போன்றவைகளை விட்டு மக்களின் தேவைகளை கவனிப்பதற்கென்றே ஒதுங்கி விடுவது மூலமே அவைகளை பூர்த்தியாக நிறைவேற்ற முடியும். அதே சமயம், என் குடும்பத்தினருக்கு அவர்களின் தேவைகள் பூர்த்தியாகுவதற்குரிய ஏற்பாடு செய்வதும் அவசியமாகும் என்று கூறி, வியாபாரத்தை விட்டு விட்டார்கள்.

முஸ்லிம்களின் பொதுச் சொத்திலிருந்து தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் ஒரு நாளைக்கு தேவையான செலவினங்களை பெற்றுக்கொள்வார்கள். அதிலேயே ஹஜ்ஜூம், உம்ராவும் செய்துவிட்டார்கள். பைத்துல்மாலிலிருந்து அவர்களுக்கு ஒதுக்கிய மொத்த தொகை ஒரு வருடத்திற்கு 6000 திர்ஹம் தான்.

அவர்களுக்கு மரணநேரம் வந்ததும், முஸ்லிம்களின் பொதுச் சொத்திலிருந்து நாம் எதையெல்லாம் பெற்றுக் கொண்டோமோ, அவையனைத்தையும் திரும்பக் கொடுத்து விடுங்கள். இந்த பொருளிலிருந்து எதனையும் நான் எடுக்க மாட்டேன். மேலும் இன்னின்ன இடங்களிலுள்ள எனக்கு சொந்தமான நிலங்கள் முஸ்லிம்களின் பொருளிலிருந்து நான் அனுபவித்தவைகளுக்கு பகரமாக முஸ்லிம்களுக்கு சொந்தமாகும் என்று கூறினார்கள். எனவே அந்த நிலத்தையும், ஒரு பால் கொடுக்கும் ஒட்டகம், வாட்களை தீட்டும் அடிமை 5 திர்ஹத்துக்கு சமமான ஒரு போர்வை ஆகியவைகளை உமர் (ரலி) அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள், தனக்கு பின்வரும் கலீஃபாக்களை சிரமத்தில் போட்டுவிட்டார்கள் என்று உமர் (ரலி) கூறினார்கள்.

ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 11-ம் ஆண்டு உமர் (ரலி) அவர்களை அமீராக்கி ஹஜ்ஜூக்கு அனுப்பினார்கள். ஹிஜ்ரி 12-ம் ஆண்டு, ரஜப் மாதத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள் உம்ராவிற்காக சென்றார்கள். லுஹா நேரத்தில் மக்காவில் நுழைந்தார்கள். தன் வீட்டுக்கு வந்தபோது அதன் வாயிலில் அபூகுஹாஃபாவும், அவர் களுடன் சில வாலிபர்களும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். இதோ, உங்கள் மகன், அபூபக்கர் வந்து விட்டார் என்று அவரிடம் சொல்லப்பட்டதும் அவர் எழுந்து நின்றார். உடனே அபூபக்கர் (ரலி) அவர்கள் தன் வாகனத்தை நிறுத்தி, அதிலிருந்து இறங்கி, ஒட்டகத்தை அப்படியே நிற்க விட்டுவிட்டு, என் தந்தையே ! தாங்கள் எழுந்து நிற்க வேண்டாம் என்று கூறிக் கொண்டே வந்தார்கள். பின்பு அவர்களை சந்தித்து, கட்டியணைத்து (தன் தந்தையாகிய) அபூகுஹாஃபாவின் நெற்றியில் முத்த மிட்டார்கள். அப்பெரியவரும் தன் மகன் வந்த மகிழ்ச்சியினால் அழுதார்.

பின்பு (அபூபக்கரின், உம்ரா பயணத்தை கேள்வி பட்டு, தாங்களும் வெளியே சென்று உம்ராவிற்காக இஹ்ராம் கட்டிக் கொண்ட மக்கத்து தலைவர்களான) அத்தாப் பின் அஸீது, சுஹைல் பின் அம்ரு, இக்ரிமா பின் அபீஜஹல் ரலியல்லாஹூ அன்ஹூம் ஆகியோர், மக்காவிற்குள் வந்து ரஸூலுல்லாஹ்வின் கலீஃபாவே ! ‘ஸலாமுன் அலைக்க’ என்று அபூபக்கருக்கு சலாம் சொல்லி அனைவரும் அவர்களுடன் முஸாஃபஹா செய்தார்கள். அவர்கள் ரஸூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை நினைவு படுத்தி பேசிய போது அபூபக்கர் (ரலி) அவர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். பின்பு அபூகுஹாஃபா (ரலி) அவர்களுக்கு சலாம் கூறினார்கள்.

உடனே அபூகுஹாஃபா அபூபக்கர் (ரலி) அவர்களிடம், அதீகே ! (இக் கூட்டத்தினை நரகிலிருந்து விடுதலை பெறச் செய்தவரே !) இவர்களுடன் நல்ல விதமாய், உபகாரத்துடன் நடந்து கொள்ளவும் என்று கூறினார். அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் எனது தந்தையே ! லாஹவ்ல வலாகுவ்வத்த, இல்லாஹ்பில்லாஹ். அல்லாஹ்வின் உதவி கொண்டே நன்மை செய்ய முடியும் தீமையை கைவிட முடியும் நான் மாபெரும் பொருப்பு கொடுக்கப்பட்டுள்ளேன். அல்லாஹ்வின் உதவி கொண்டே தவிர அதை நிறைவேற்ற எனக்கு சக்தியில்லை என்று சொன்னார்கள்.

பின்பு தன் வீட்டினுள் நுழைந்து குளித்துவிட்டு, வெளியேறிய போது, அவர்களின் தோழர்கள், அவர்களை பின் துயர்ந்து சென்றார்கள். அப்போது அவர்களை அகற்றி நீங்கள் மெதுவாக வாருங்கள். (எனக்கு பின்னால் வர வேண்டியதில்லை) என்று கூறிவிட்டார்கள்.

மேலும் பாதையில் செல்லும் போது மக்கள் அவர்களுக்கு முன் வந்து அவர்களை சந்தித்து நபி(ஸல்) அவர்களை பற்றி விசாரிப்பார்கள். அபூபக்கர்(ரலி) அவர்கள் அழுதுவிடுவார்கள். இவ்வாறு பைத்துல்லாஹ் வந்து சேர்ந்ததும், தன் மேல்துண்டால் இள்திபா செய்து (அதாவது இஹ்ராமின் மேல் துணியை வலது புஜம் வெளியே தெரியும் விதத்தில் போட்டுக் கொண்டு) தவாப் செய்தார்கள். பின்பு ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட்டார்கள். ருக்னை இஸ்திலாம் செய்தார்கள். பின்பு 7 சுற்றுகள் சுற்றி தவாஃப் செய்து முடித்ததும், இரண்டு ரக்அத் தொழுதார்கள். அதற்குபின் தன் வீட்டுக்கு திரும்பினார்கள்.

லுஹர் நேரம் ஆனதும் சென்று பைத்துல்லாஹ்வை தவாஃப் செய்து விட்டு தாருன் நத்வா என்ற ஆலோசனைக் கூடத்தின் அருகில் அமர்ந்து, தன் அநீதத்தை முறையிடுபவர் எஙரும் உள்ளனரா ? அல்லது தன் தேவையை, உரிமையை கேட்பவர் எவரும் உள்ளார்களா ? என்று கேட்டார்கள். மக்களில் யாரும் அவர்களிடம் வரவில்லை. மக்கள் அனைவரும் தங்கள் பொருப்புதாரி அத்தாப் பின் அஸீதை பாராட்டினார்கள். பின்பு அங்கு அமர்ந்திருந்த மக்கள் அவர்களுக்கு விடையளித்தார்கள். பின்பு மதீனாவை நோக்கி திரும்பி விட்டார்கள்.

ஹிஜ்ரி 12-ம் ஆண்டு ஹஜ்ஜூடைய காலம் வந்ததும் மக்களுடன் சேர்ந்து அவ்வருடம் ஹஜ்ஜூ செய்தார்கள். அதை ஹஜ்ஜே இஃப்ராதாக செய்தார்கள். மேலும் ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களை மதினாவில் தன் பிரதிநிதியாக விட்டுச் சென்றார்கள்.

நூல் : தபகாத், ஹ-ச – 180,181 – 2



இதுதான் எங்களின் உத்தம நபியின் அருமை தோழர், ‘சித்தீகுல் அக்பர்’ அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் எளிமை, பணிவு, இறையச்சத்துடன் கூடிய வாழ்க்கை முறையின் ஒரு பகுதி. ஜனாதிபதியாக பதியேற்ற பின்னும் ஒரு சிறுமிக்கு அவளின் விருப்பப்படி பால் கறந்து கொடுத்து அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி, துனியாவை தேவையாகவும் மறுமையை நோக்கமாகவும் கொண்ட அவர்களின் வாழ்க்கையின் எடுத்துக்காட்டு. அல்லாஹ் இவ்வுத் தமர்களின் வாழ்க்கை முறையை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக. மேலும் அல்லாஹ்வும், ரசூலும் கூறியவைகளை எவ்வாறு இவ்வுத்தமர்கள் விளங்கி அதன்படி அமல் செய்தார்களோ அவ்விளக்கத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன். வஆகிர தாவானா வஅனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாம்.

இவன்.
முஹம்மது பதுருதீன்.

No comments: