Thursday 5 July 2007

ஹயாத்துஸ் ஸஹாபா

பயணத்தின்போது அமீர் நியமிப்பது :

உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறுகிறார்கள். மூன்று நபர்கள் பயணம் செய்தால் அவர்களில் ஒருவர் அமீராகி கொள்ளட்டும். இவ்வாறு அமீர் நியமனம் செய்து கொள்ளும்படி நபியவர்கள் ஏவியுள்ளார்கள்.

நூல் : பஜ்ஜார் ஹ.ச-70-2



கருத்து வேற்றுமை கொள்ளுவதை எச்சரித்து இப்னு மஸ்வூது ரலியல்லாஹூ அன்ஹூ செய்த குத்பா :

இப்னு மஸ்வூது ரலியல்லாஹூ அன்ஹூ கூறினார்கள் ஓ ஜனங்களே ! கட்டுப்பட்டு நடக்குமாறும் ஒன்றுபட்டு வாழும்படியும் உங்களை நான் ஏவுகிறேன். ஏனெனில் அது அல்லாஹ் ஏவிய ஒப்பந்தமாகும். மேலும் ஒன்று சேர்ந்து ஜமாத்தாக இருப்பதனால் ஏற்படும் உங்களுக்கு வெறுப்பான நிலை, பிரிந்து வாழ்வதில் உங்களுக்குள்ள பிரியமான நிலையை விட சிறந்ததாகும். அல்லாஹ் எல்லா பொருளுக்கும் ஒரு முடிவை வைத்தே படைத்துள்ளான். ஒரு நாள் அப்பொருள் அதன் எல்லையை அடைந்து முடிவடைந்து போகும், மேலும் இது இஸ்லாம் வளர்ச்சியடைந்து உறுதி பெறும் காலமாக உள்ளது, அதுவும் தன் எல்லையை சென்றடைய நெருங்கி விட்டது, பின்பு கியாமத் நாள் வரை இஸ்லாம் வளர்ந்து கொண்டும் குறைந்து கொண்டும் இருக்கும்.

அதன் அடையாளம் ஏழ்மை வருவதாகும், ஒரு ஏழை தனக்கு உதவி செய்யும் யாரையும் பெற்றுக் கொள்ள மாட்டான், ஒரு செல்வந்தன் தன்னிடமுள்ளவைகளைத் தனக்கு போதுமானதில்லை என்றே கருதுவான், இன்னும் அச்சமயம் ஒரு ஏழை தன் சகோதரனிடமும், சிறிய தந்தை மகனிடமும் தன் தேவைகளை முறையிடுவான். அவன் எப்பொருளையும் கொடுத்து உதவ மாட்டான். இன்னும் எந்தளவு ஏழ்மை என்றால் ஒரு ஏழை பெருந்திரளாக கூடியுள்ள இரு கூட்டத்தினர் மத்தியில் தன் தேவைகளைக் கேட்டவனாக நடந்து செல்வான். அவன் கையில் ஒரு பொருளும் வைக்கப்படாது (அதாவது யாரும் அவனுக்கு உதவி செய்திருக்க மாட்டார்கள்) இந்தளவு கடுமையான ஏழ்மை வரும்,

ஆக பூமி முழுவதும் ஏழ்மை, ஏழ்மை என்ற சப்தமாகவே இருக்கும், பூமியின் எல்லா பகுதியினரும் தங்கள் பகுதியில் ஏழ்மையை முறையிடுபவர்களாகவேக் காணப்படுவார்கள், பின்பு அல்லாஹ் நாடியபடி சில காலங்களுக்கு பின் பூமியில் (இந்த நிலை மாறி) அமைதி ஏற்படும் அதன் பின் பூமி பசுமை பெற்று செழிப்படைந்து தன் ஈரல் துண்டுகளை வெளிப்படுத்தும், அபூ அப்துர் ரஹ்மானே பூமி தன் ஈரல் துண்டுகளை வெளிப்படுத்துவது என்றால் என்ன ? என்று கேட்கப்பட்டதும், தங்கம் வெள்ளியின் தூண்கள் (வெளியேற்றப்படும்) என்று கூறினார்கள், அன்றைய நாளிலிருந்து கியாமத் வரை தங்கம் வெள்ளியால் எவ்வித பலனும் பெறப்படாது என்றும் கூறினார்கள்.

நூல் : தபரானீ

No comments: